ராமநாதபுரம் ரயில் நிலையத்தை விரிவாக்கம் செய்ய வலியுறுத்தல்

போதுமான இடவசதி மற்றும் புதிய ரயில்பாதைகள் அமைக்கப்பட உள்ளதால் ராமநாதபுரம் ரயில் நிலையத்தை சந்திப்பு ரயில் நிலையமாக மேம்படுத்த வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

போதுமான இடவசதி மற்றும் புதிய ரயில்பாதைகள் அமைக்கப்பட உள்ளதால் ராமநாதபுரம் ரயில் நிலையத்தை சந்திப்பு ரயில் நிலையமாக மேம்படுத்த வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேசுவரம், திருப்புல்லாணி, திருஉத்தரகோசமங்கை, தேவிபட்டினம், ஏர்வாடி தர்கா உள்பட ஏராளமான புண்ணியத் தலங்கள் உள்ளன. இதனால் வடமாநிலங்களில் இருந்தும், பிற மாவட்டங்களில் இருந்தும் தினசரி ஏராளமான பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். எனவே மதுரை மற்றும் மானாமதுரை வரை வந்து செல்லும் சில ரயில்களை ராமேசுவரம் வரை நீட்டிக்க வேண்டும் என பல ஆண்டுகளாக பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ரயில் பெட்டிகளை சுத்தப்படுத்துதல் மற்றும் பராமரிப்பு செய்வதற்கான வசதிகள் தற்போது ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் இல்லை. ஆனால் அதற்குத் தேவையான இடவசதி உள்ளது.
புதிய பாதைகள்: மேலும் காரைக்குடி முதல் கன்னியாகுமரி வரை ராமநாதபுரம் வழியாக புதிய ரயில் பாதையும், உப்பூர் அனல் மின் நிலையத்துக்கு தூத்துக்குடியிலிருந்து நிலக்கரி எடுத்துச் செல்ல வசதியாக புதிய ரயில் பாதையும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அப்போது, ராமநாதபுரம் ரயில் நிலையம் சந்திப்பு நிலையமாக மாறிவிடும். அதை எதிர்கொள்ளும் வகையில் ரயில்நிலைய மேம்பாட்டுப்ப பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து ராமநாதபுரம் வர்த்தக சங்க செயலாளர் பா.ஜெகதீசன் கூறியது: காரைக்கால் முதல் கன்னியாகுமரி வரை புதிய ரயில்பாதை அமைக்க 10 ஆண்டுகளுக்கு முன்பே கோரிக்கை விடுத்தோம். ஆனால், வணிக ரீதியாக பயனின்லை எனக் கூறி திட்டம் கிடப்பில் போடப்பட்டது. தற்போது மீண்டும் ஆய்வு செய்தால் நிச்சயம் வணிக ரீதியாக பலனளிக்கும் என வலியுறுத்தியுள்ளோம். இவ்வழித்தடம் அமைக்கப்பட்டால் தூத்துக்குடியிலிருந்து காரைக்காலுக்கு ராமநாதபுரம் வழியாக சரக்கு ரயில்களும் சென்றுவரும். மேலும் காரைக்குடியிலிருந்து தேவகோட்டை, தொண்டி, தேவிபட்டினம், ராமநாதபுரம்,கீழக்கரை, சாயல்குடி, ஏர்வாடி, தூத்துக்குடி, திருச்செந்தூர் வழியாக கன்னியாகுமரி செல்லும் வகையில் புதிய ரயில் பாதை அமைக்கவும் ஆய்வு முடிக்கப்பட்டுள்ளது.
உப்பூர் புதிய அனல் மின் நிலையத்துக்கு தூத்துக்குடியிலிருந்து நிலக்கரி கொண்டு செல்ல இந்தப் பாதை உதவும். இந்த ரயில் பாதைகள் அமைக்கப்பட்டால் ராமநாதபுரம் ரயில் நிலையம் சந்திப்பு ரயில் நிலையமாக மாற்றப்படும்  என்றார்.
ரயில்வே அதிகாரி ஒருவர் கூறியது: ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் போதுமான இடம் உள்ளது. தூத்துக்குடி - உப்பூர், காரைக்குடி -கன்னியாகுமரி ரயில் பாதைகள் அமைக்கப்பட்டால் இங்கு ரயில் பெட்டிகளைப் பராமரிக்கத் தேவையான வசதி ஏற்படுத்தப்படும். வடமாநிலங்களில் இருந்து கூடுதல் ரயில்கள் இயக்கவும் வாய்ப்புள்ளது  என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com