ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டத்தில் வியாழக்கிழமை தொடங்கிய பிளஸ் 2 பொதுத்தேர்வை 32,202 மாணவ, மாணவியர் எழுதினர்.
ராமநாதபுரத்தில்... ராமநாதபுரம் மாவட்டத்தில் 16285 மாணவர்கள் தேர்வு எழுதினர்.
பிளஸ் 2 அரசுப் பொதுத்தேர்வு வியாழக்கிழமை மார்ச் முதல் தேதி தொடங்கி ஏப்ரல் 6 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 54 மையங்களில் 139 பள்ளிகளைச் சேர்ந்த 7351 மாணவர்கள், 8439 மாணவியர்கள், தனித்தேர்வர்களில் 284 மாணவர்களும், 211 மாணவியர்களுமாக மொத்தம் 16285 பேர் எழுதினர்.
முதன்மைக் கண்காணிப்பாளர்களாக 58 தலைமை ஆசிரியர்களும், அறைக் கண்காணிப்பாளர்களாக 854 ஆசிரியர்களும், சொல்வதைக் கேட்டு எழுதுபவர்களுக்காக மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்ய 11 ஆசிரியர்களும் பறக்கும் படைகளாக 104 ஆசிரியர்களும் நியமனம் செய்யப்பட்டிருந்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை ஹமீதியா ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 தேர்வு நடைபெறுவதை ஆட்சியர் எஸ்.நடராஜன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆர்.முருகன் உடனிருந்தார்.
சிவகங்கையில்... சிவகங்கை மற்றும் தேவகோட்டை ஆகிய கல்வி மாவட்டங்களை உள்ளடக்கிய சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 60 தேர்வு மையங்களில் 7,045 மாணவர்களும், 8,978 மாணவிகளும் ஆக மொத்தம் 16,013 மாணவ, மாணவியர்கள் தேர்வு எழுதுவதற்கு பதிவு செய்திருந்தனர்.
இதையடுத்து மார்ச் 1 இல் நடைபெற்ற தமிழ்-முதல் தாள் தேர்வில் சிவகங்கை மாவட்டம் முழுவதும் உள்ள 60 தேர்வு மையங்களில் 15,917 மாணவ,மாணவிகள் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். 96 பேர் தேர்வு எழுத வரவில்லை. தவிர தனித்தேர்வர்களாக 177 மாணவ, மாணவிகள் பதிவு செய்திருந்தனர். அவர்களில் 144 பேர் தேர்வு எழுதினர். 33 பேர் வரவில்லை.
சிவகங்கை அருகே உள்ள இடையமேலூர் அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் சிவகங்கை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பிளஸ் 2 பொது தேர்வு மையங்களை மாவட்ட ஆட்சியர் க.லதா பார்வையிட்டார்.
அப்போது சிவகங்கை மாவட்ட கல்வி அலுவலர் சகிதா உள்ளிட்டோர் உடனிருந்தனர். மேலும், மாவட்டம் முழுவதும் 18 வழித்தட அலுவலர்கள்,14 ஆய்வு அலுவலர்கள் தலைமையிலான பறக்கும் படை உறுப்பினர்கள், 96 பறக்கும் படை உறுப்பினர்கள் ஆகியோர்கள் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.