"வறட்சி மாவட்டத்தில்' வாகை சூடப்போவது யார்?

சுட்டெரிக்கும் வெயில், பாளம் பாளமாய் வெடித்த நீர் நிலைகள், புழுதி பறக்கும் சாலைகள்,  குடிநீரைத் தேடி அலையும்
Updated on
2 min read

சுட்டெரிக்கும் வெயில், பாளம் பாளமாய் வெடித்த நீர் நிலைகள், புழுதி பறக்கும் சாலைகள்,  குடிநீரைத் தேடி அலையும் பெண்கள், வெப்பக் காற்று வீசும் வீதிகள் என எங்கும் வறட்சியின் வடுக்களை கொண்டதுதான் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி. 
 சேது மண்டலம் என அழைக்கப்படும் இந்த ஆன்மிக பூமியானது கடலும், கடல் சார்ந்த பகுதியாகும். ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியானது ராமநாதபுரம்  மாவட்டத்தில் ராமநாதபுரம், முதுகுளத்தூர், பரமக்குடி, திருவாடானை ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளையும், விருதுநகர் மாவட்டத்தின் திருச்சுழி  மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தின் அறந்தாங்கி சட்டப்பேரவைத் தொகுதிகளையும் உள்ளடக்கியது.
இந்த தொகுதியைப் பொறுத்த வரையில் இதுவரை அதிகமாக காங்கிரஸ் வேட்பாளர்கள் 6 முறை வெற்றி பெற்றுள்ளனர். அதிமுக 4 முறையும், திமுக 3 முறையும், பார்வர்டு பிளாக் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. கடந்த 1967 ஆம் ஆண்டு ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் ஷெரீப் என்பவர் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 இத்தொகுதியில் முக்குலத்தோர், தாழ்த்தப்பட்டோர், யாதவர், இஸ்லாமியர், இதர சமுதாயத்தினர் என பரவலாக உள்ளனர். 
கடந்த 2014 ஆம் ஆண்டு அதிமுக சார்பில் போட்டியிட்ட அன்வர்ராஜா 4,05,945 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவருக்கு அடுத்தபடியாக திமுக வேட்பாளர் முகமது ஜலில் 2,86,621, பாஜக வேட்பாளர் குப்புராம் 1,72,082,  காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர் 62,160 வாக்குகளும் பெற்றனர்.   இத்தேர்தலில்  போட்டியிட்ட 23 சுயேச்சை வேட்பாளர்கள் மொத்தம் 32,178 வாக்குகளைப் பெற்றுள்ளனர். நோட்டாவுக்கு 6,279 வாக்குகள் கிடைத்துள்ளன. 
 பேரவைத் தொகுதி வாரியாகப் பார்த்தால் முதுகுளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிக வாக்காளர்கள் உள்ளனர். அங்கு 3.09 லட்சம் வாக்காளர்களும், அதற்கடுத்தபடியாக ராமநாதபுரத்தில் 2.92 லட்சம் வாக்காளர்களும் உள்ளனர்.  திருச்சுழி சட்டப்பேரவை தொகுதியில் 2.10 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். வெற்றி தோல்வியை ஊரகப் பகுதி வாக்களார்களே தீர்மானிப்பவர்களாக உள்ளனர். 
     கடந்த தேர்தலில் பாஜக கூட்டணியில் இருந்த மதிமுகவுக்குப் பதில் இந்த தேர்தலில் பாஜக கூட்டணியில் அதிமுக, புதிய தமிழகம் ஆகியவை இருப்பது அக்கூட்டணிக்கு கூடுதல் பலம். 
திமுக கூட்டணியில் கடந்த முறை இல்லாத இடதுசாரிக் கட்சிகளும், காங்கிரஸு
ம் இணைந்துள்ளன. கூட்டணி கணக்கு ஒரு புறமிருந்தாலும், குடிநீர் பிரச்னை பெரும்பாலான கிராமங்களில் முக்கியமாக உள்ளது.  தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படை தாக்குதல்,  விவசாயிகளுக்கு காப்பீடுத் தொகை முழுமையாக வழங்காதது, நகராட்சிகளில் சொத்து வரி  உயர்வு என பல உள்ளூர் பிரச்னைகள் பொதுமக்களால் விவாதிக்கப்படுகின்றன. 
   தொகுதியில் பிரச்னைகளை தாண்டி பாஜக, அதிமுகவுக்கு என தனி வாக்கு வங்கி உள்ளது. அதனால் கூட்டணி வாக்கு வங்கி கணக்கின் அடிப்படையில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சாதகமான சூழல் உள்ளது. 
 திமுக கூட்டணியில் இந்திய  யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் கே.நவாஸ்கனிக்கு, அவர் சார்ந்த சமூக வாக்குகள் முழுமையாக கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.  அமமுக சார்பில் போட்டியிடும் வ.து.ந.ஆனந்த் உள்ளூர்காரர் என்ற முத்திரையுடன், அனைத்துத் தரப்பினராலும் கவனிக்கப்படுபவராக உள்ளார்.  இதனால் அதிமுக வாக்குகள் சிதறும் வாய்ப்பு உள்ளது. இதனை  தேமுதிக, புதிய தமிழகம் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் வாக்குகள் ஈடு செய்யும் என்கின்றனர் அதிமுகவினர் நம்புகின்றனர்.
       மக்கள் நீதி மய்ய வேட்பாளர் விஜயபாஸ்கர் பிரசாரம் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லை.  தொகுதி முழுவதும் மரங்களில் பறக்கும் கொடிகள், சுவர்களை அலங்கரிக்கும் கட்சி விளம்பரங்கள் எதுவும் இல்லாமல் ஆர்ப்பாட்டமில்லாத பிரசார நிலையே இப்போது வரையில் காணப்பட்டாலும், பாஜக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், அமமுக ஆகியவற்றுக்கு இடையேதான் மும்முனை போட்டி நிலவுகிறது.
      வெயிலுக்கும், வறட்சிக்கும் பெயர் போன  ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் வாகை சூடப்போவது யார் என்ற எதிர்பார்ப்போடு மக்கள் காத்திருக்கின்றனர். 
வாக்காளர்கள் விபரம்
ஆண்கள் ......................7,73,036
பெண்கள் .....................7,79,643
மூன்றாம் பாலினத்தவர்............ 82
மொத்தம்..................... 15,52,761
.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com