கி.வீரமணி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி எஸ்.பி.யிடம் இந்து அமைப்பினர் மனு
By DIN | Published On : 01st April 2019 06:15 AM | Last Updated : 01st April 2019 06:15 AM | அ+அ அ- |

இந்து கடவுளைப் பற்றி அவதூறாகப் பேசிய திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இந்து அமைப்பினர் ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் ஞாயிற்றுக்கிழமை புகார் மனு அளித்தனர்.
சென்னையில் கடந்த 23 ஆம் தேதி நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை ஆதரித்து திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி பேசினார். அப்போது இந்து கடவுள் கிருஷ்ணரின் 9 ஆவது அவதாரத்தையும், பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தையும் தொடர்புபடுத்தி அவர் இழிவாகப் பேசியதாகக் கூறப்படுகிறது.
இதனைக் கண்டித்து ராமநாதபுரம் மாவட்ட இந்து அமைப்பினர் கி.வீரமணியை கைது செய்யக் கோரி புகார் மனு அளித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: பக்தி என்பது தனிநபரின் நம்பிக்கை, அந்த நம்பிக்கையை கொச்சைப்படுத்தும் வகையில் வீரமணி பேசியுள்ளார். இது இருதரப்பினரிடையே மோதலை ஏற்படுத்தும் நோக்கத்துடன் பேசியுள்ளதாக தெரிகிறது.
மேலும் அவரது பேச்சு மத நம்பிக்கையை கொச்சைப்படுத்தும் வகையில் உள்ளது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.