பிரதமர் மோடி பொதுக்கூட்டத்துக்கு வெளிமாவட்ட போலீஸ் வரவழைப்பு
By DIN | Published On : 11th April 2019 07:17 AM | Last Updated : 11th April 2019 07:17 AM | அ+அ அ- |

ராமநாதபுரத்தில் பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்கும் தேர்தல் பிரசார பொதுக்கூட்ட பாதுகாப்புக்காக வெளி மாவட்ட போலீஸார் வரவழைக்கப்படுவர் என்று காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா தெரிவித்தார்.
ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ராமநாதபுரத்தில் வரும் 13 ஆம் தேதி நடைபெற உள்ள பிரசாரக் கூட்டத்தில் பேசுகின்றனர்.
இக்கூட்டத்துக்காக பட்டினம்காத்தான் பகுதியில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுவருகிறது. பந்தல் அமைக்கும் பகுதியின் பாதுகாப்பு குறித்து காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ்மீனா புதன்கிழமை காலையில் பார்வையிட்டார்.
பிரதமர் வரும் வழி, மேடை உள்ளிட்ட பகுதிகளை அவர் பார்வையிட்டு காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: பிரதமர் மற்றும் தமிழக முதல்வர் உள்ளிட்டோர் பிரசாரத்துக்கு வருகை தரும் நாளில் ராமநாதபுரம் மட்டுமின்றி வெளிமாவட்டப் போலீஸாரும் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் மூலம் பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது.
மேலும், பிரதமரின் ஹெலிகாப்டர் இறங்கும் தளம் முதல் அவர் செல்லும் சாலைகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கட்சி வேட்பாளர்கள் உள்ளிட்டோருக்கு போதிய பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது என்றார்.