பிரசித்தி பெற்ற திருஉத்திரகோசமங்கையில் அமைந்துள்ள அருள்மிகு மங்களநாதர் சுவாமி திருக்கோயிலின் சித்திரைப் பெருவிழா வியாழக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ராமநாதபுரம் அருகேயுள்ள இக்கோயிலில் புகழ்பெற்ற பச்சை மரகதக் கல்லாலான நடராஜர் சிலை அமைந்துள்ளது. இச்சிலை, சந்தனத்தால் காப்பிடப்பட்டிருக்கும். ஆண்டுதோறும் ஆருத்ரா தரிசனத்தன்று மட்டுமே சந்தனக் காப்பு கலைக்கப்பட்டு, பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவது வழக்கம். இத்திருக்கோயிலின் சித்திரைப் பெருவிழா கொடியேற்றம் வியாழக்கிழமை காலை நடைபெற்றது. அதற்காக, கோயில் கொடிக் கம்பம் அலங்கரிக்கப்பட்டு, சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.
பின்னர், மேளதாளம் முழங்க கொடிமரத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு, பூஜைகளைத் தொடர்ந்து கொடியேற்றம் நடைபெற்றது. அப்போது, அங்கு மங்களநாத சுவாமி, அம்மனுடன் எழுந்தருளி அருள்பாலித்தார்.
அதன்பின்னர், சுவாமி கோயில் பிரகாரத்தில் வலம் வந்து அருள்பாலித்தார். நூற்றுக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இரவில், சுவாமி பூத வாகனத்தில் உலா வந்தார்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சுவாமி-அம்பாள் திருக்கல்யாணம் ஏப்ரல் 18 ஆம் தேதி மாலை 4.30 மணி முதல் 6.30 மணிக்குள் நடைபெறுகிறது. ஏப்ரல் 19 ஆம் தேதி திருத்தேரோட்டம் நடைபெறுகிறது. ஏப்ரல் 20 ஆம் தேதி மாலை தீர்த்தவாரியுடன் இக்கோயில் சித்திரைப் பெருவிழா நிறைவடைகிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை, ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தான திவான் கே. பழனிவேல்பாண்டியன், சரகப் பொறுப்பாளர் எம். ராமு உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.