முதுகுளத்தூரில் டிடிவி தினகரன், வேட்பாளர் மீது வழக்குப் பதிவு
By DIN | Published On : 12th April 2019 07:39 AM | Last Updated : 12th April 2019 07:39 AM | அ+அ அ- |

முதுகுளத்தூரில் பிரசாரத்தின்போது விதிமுறைகளை மீறியதாக, அமமுக துணைப் பொதுச் செயலர் டி.டி.வி. தினகரன் மற்றும் அக்கட்சியின் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி வேட்பாளர் ஆகியோர் மீது போலீஸார் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி அமமுக வேட்பாளர் வ.து.ந. ஆனந்தை ஆதரித்து, அக்கட்சியின் துணைப் பொதுச் செயலர் டி.டி.வி. தினகரன் செவ்வாய்க்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, முதுகுளத்தூர் பேருந்து நிலையப் பகுதியில் அமமுகவினர் ஏராளமான வாகனங்களில் வந்துள்ளனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டது.
இது குறித்து முதுகுளத்தூர் காவல் நிலையத்தில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் ரமேஷ்குமார், தேர்தல் விதிமுறை மீறப்பட்டதாக அளித்த புகாரின்பேரில், சார்பு-ஆய்வாளர் கோடீஸ்வரன், டி.டி.வி. தினகரன் மற்றும் வேட்பாளர் வ.து.ந. ஆனந்த் ஆகிய இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளார்.