பாம்பனில் குடோனில் பதுக்கி வைத்திருந்த 1286 மது பாட்டில்கள் பறிமுதல்: ஒருவர் கைது
By DIN | Published On : 26th April 2019 01:35 AM | Last Updated : 26th April 2019 01:35 AM | அ+அ அ- |

பாம்பன் மாயா பஜார் பகுதியில் உள்ள ஒரு குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1286 மது பாட்டில்களை போலீஸார் வியாழக்கிழமை பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மதுக்கடைகளை அகற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து டாஸ்மாக் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்ட நிலையில், பாம்பன் பகுதியில் மட்டும் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டுள்ளது. இதனால் ராமேசுவரத்தில் சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவ்வாறு விற்பனை செய்வதற்காக பாம்பன் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் இருந்து சட்டவிரோதமாக மதுபாட்டில் வாங்கி வந்து குடோனில் மறைத்து வைத்து ராமேசுவரத்திற்கு எடுத்து செல்ல உள்ளதாக பாம்பன் காவல் நிலைய ஆய்வாளர் மாயாராஜலட்சுமிக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீஸார் பாம்பன் மாயா பஜார் பகுதியில் உள்ள குடோனில் சோதனையிட்டனர்.
அப்போது அங்கு 1286 மது பாட்டில்களை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீஸார் முருகேசன்(56) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.