திருவெற்றியூரில் செயல்பாடின்றி உவர் நீரை குடிநீராக்கும் இயந்திரம்
By DIN | Published On : 04th August 2019 03:48 AM | Last Updated : 04th August 2019 03:48 AM | அ+அ அ- |

திருவாடானை அருகே திருவெற்றியூரில் கிணறு தண்ணீரின்றி வறண்டு விட்டதால் கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக அமைக்கப்பட்ட உவர் நீரை குடிநீராக்கும் இயந்திரம் செயல்பாடின்றி உள்ளது.
திருவாடானை அருகே உள்ள திருவெற்றியூரில் 500-க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. மேலும் இங்கு பிரசித்தி பெற்ற சிவகங்கை சமஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட பாகம்பிரியாள் சமேத வல்மிகநாத சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு தினமும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வருகின்றனர். இக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு போதிய குடிநீர் வசதி இல்லாமல் பெரிதும் சிரமப்பட்டு வந்தனர்.
இந்நிலையில் கடந்த 2014-15 ஆம் ஆண்டு ரூ.8.50 லட்சம் செலவில் பேரிடர் மேலாண்மை திட்டத்தின் கீழ் உவர் நீரை குடிநீராக்கும் இயந்திரம் பொருத்தப்பட்டது. இதன் மூலம் அருகில் இருக்கும் கிணற்று நீரில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட நீர் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வந்தன.
இந்நிலையில் தொடர் வறட்சி காரணமாக கிணறு தண்ணீரின்றி வறண்டு விட்டது. இதனால் குடிநீர் சுத்திகரிப்பு இந்திரம் செயல்படாமல் உள்ளது. மேலும் இங்கு வரும் பக்தர்களுக்கு தேவையான குடிநீர் கிடைக்காமல் சிரமப்பட்டு வருகின்றனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் இந்த சுத்திகரிப்பு இயந்திரம் அருகே புதிதாக ஆழ்துளைக் கிணறு அமைத்து, இந்த இயந்திரத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என
பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.