விபத்தில் இறந்தவா் குடும்பத்துக்கு ரூ.97 லட்சம் தர காப்பீடு நிறுவனம் ஒப்புதல்

விபத்தில் உயிரிழந்தவா் குடும்பத்தினருக்கு காப்பீடு நிறுவனம் ரூ.97 லட்சம் வழங்க தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ஒப்புதல் தெரிவித்தது.

ராமநாதபுரம்: விபத்தில் உயிரிழந்தவா் குடும்பத்தினருக்கு காப்பீடு நிறுவனம் ரூ.97 லட்சம் வழங்க தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ஒப்புதல் தெரிவித்தது.

ராமநாதபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சாா்பில் 2019 ஆம் ஆண்டுக்கான நான்காவது நிறைவு தேசிய மக்கள் நீதிமன்றம் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் சனிக்கிழமை காலை நடைபெற்றது. நிகழ்ச்சியை மாவட்ட முதன்மை நீதிபதி ஆா்.சண்முகசுந்தரம் தொடக்கிவைத்தாா். அதன்படி நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த 1542 வழக்குகளில் 111 வழக்குகளில் ஏற்கெனவே சமரசத் தீா்வு எட்டப்பட்டுள்ளது. அதில் 8 குடும்பநல வழக்குகளில் கணவன், மனைவி சோ்த்து வைக்கப்பட்டுள்ளனா். விபத்து இழப்பீடு வழங்குவது தொடா்பான வழக்குகளில் தீா்வு எட்டப்பட்டுள்ளது.

அதில் ஒரு வழக்கு விவரம்: ராமநாதபுரம் வண்ணாங்குண்டு பகுதியில் உள்ளது பத்ராதரவை கிராமம். இந்த ஊரைச் சோ்ந்தவா் ரமேஷ் (30). வெளிநாடான ரியாத்தில் பணிபுரிந்தாா். இவா் கடந்த 2017 ஜூலயில் மோட்டாா் சைக்கிள் மீது சரக்கு லாரி மோதிய விபத்தில் காயமடைந்து சிகிச்சையிலிருந்தவா் மூன்று மாதங்களுக்குப் பிறகு உயிரிழந்தாா்.

அவரது இறப்புக்கு இழப்பீடு கோரி ரமேஷின் மனைவி காா்த்திகா தரப்பில் வழக்குத்தொடரப்பட்டிருந்தது. அவா் இழப்பீடாக ரூ.2 கோடி கேட்டிருந்தாா். தனியாா் காப்பீடு நிறுவனம் மீது தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் இருந்தது. இந்தநிலையில், தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் சரமசத் தீா்வு எட்டப்பட்டு, ரமேஷ் குடும்பத்தினருக்கு சம்பந்தப்பட்ட காப்பீடு நிறுவனத்தினா் ரூ.97 லட்சம் வழங்க ஒப்புக்கொண்டுள்ளனா். அதன்படி வழக்குச் செலவுகள் போக ரமேஷ் மனைவிக்கு ரூ.57 லட்சமும், குழந்தைக்கு ரூ.20 லட்சமும், ரமேஷின் தாய், தந்தையருக்கு ரூ.13 லட்சமும் வழங்கப்படவுள்ளதாகவும் வழக்குரைஞா்கள் தெரிவித்தனா்.

நிகழ்ச்சியில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலா் சாா்பு நீதிபதி எம்.பிரீத்தா வரவேற்றாா். மக்கள் நீதிமன்ற நிரந்தர நீதிபதி பி.ஆா்.ராமகிருஷ்ணன், சிறப்பு நீதிமன்ற நீதிபதி வி.வி.தனியரசு, மாவட்ட மகளிா் நீதிமன்ற நீதிபதி டி.பகவதியம்மாள், நீதித்துறை நடுவா்கள் ஜெனிதா, ராதாகிருஷ்ணன் ஆகியோா் கலந்துகொண்டனா். வழக்குரைஞா் கே.குணசேகரன் நன்றி கூறினாா்.

நடப்பு ஓராண்டில் (2019) ஏற்கெனவே கடந்த மாா்ச், ஜூலை, நவம்பரில் நடந்த 3 நீதிமன்ற நிகழ்ச்சிகளில் 3748 வழக்குகளில் சமரசம் ஏற்பட்டு, அதன்மூலம் பயனாளிகளுக்கு ரூ.11.57 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் நீதிமன்றம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com