முதுகுளத்தூர், கடலாடியில் மத்திய அதிவிரைவுப் படையினர் அணிவகுப்பு
By DIN | Published On : 12th February 2019 07:03 AM | Last Updated : 12th February 2019 07:03 AM | அ+அ அ- |

முதுகுளத்தூர், கடலாடி பகுதியில் மத்திய அதிவிரைவுப்படையினர் அணிவகுப்பு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ்மீனா உத்தரவின் பேரில் முதுகுளத்தூர் , கடலாடி பகுதியில் மத்திய அதிவிரைவுப்படை அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. முதுகுளத்தூரில் நடைபெற்ற இந்த அணிவகுப்பு கடலாடி விலக்கு ரோட்டில் இருந்து காந்தி சிலை,பேருந்து நிலையம் வழியாக ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நிறைவு பெற்றது. அணிவகுப்பில் கோவை பட்டாலியன்(105) மத்திய அதிவிரைவுப்படையினர் உதவி கமாண்டோ இளங்கோ தலைமையில், முதுகுளத்தூர் காவல்துறை ஆய்வாளர் பென்சாம், சார்பு ஆய்வாளர்கள் செல்வராஜ் அமுத வள்ளி ஆகியோர் முன்னிலையில் 50 பேர் கொண்ட அதிவிரைவுபடையினர் கலந்து கொண்டனர்.
பதற்றம் நிலவும் முக்கியமான இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்களுக்கு அச்சத்தை போக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டு பிப்ரவரி மாதம் அணிவகுப்பு நடைபெறும். இந்நிகழ்ச்சி கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது என காவல்துறை ஆய்வாளர் பென்சாம் தெரிவித்தார்.
அதே போன்று,கடலாடியில் பகுதியில் மத்திய அதிவிரைவுப்படை அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அணிவகுப்பு கடலாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தொடங்கி,பேருந்து நிலையம் , அரசு மருத்துவமனை வழியாக சென்று வட்டாட்சியர் அலுவலகத்தில் நிறைவு பெற்றது. நிகழ்ச்சியில் கடலாடி காவல்நிலைய போலீஸார் கலந்து கொண்டனர்.