வகுப்பறை பற்றாக்குறையால் மரத்தடியில் படிக்கும் மாணவர்கள்
By DIN | Published On : 12th February 2019 07:05 AM | Last Updated : 12th February 2019 07:05 AM | அ+அ அ- |

கமுதி அருகே அரசு மேல்நிலைப்பள்ளியில் போதிய வகுப்பறைக் கட்டடம் இல்லாததால் மாணவர்களுக்கு மரத்தடி நிழலில் வகுப்புகள் நடத்தும் அவலத்திற்கு ஆசிரியர்கள் ஆளாகியுள்ளனர்.
கமுதி - சாயல்குடி செல்லும் வழியில் கோவிலாங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுமார் 260 மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளியில் கழிப்பறை, சுற்றுச்சுவர் வசதி இல்லாத நிலையில், மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வகுப்பறை கட்டடங்களும் இல்லை. இருக்கும் கட்டடங்களும் சேதமடைந்து, இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் விளையாட்டு மைதானத்தில் உள்ள மரத்தடி நிழலில் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. வகுப்பறைகள் பற்றாக்குறை மற்றும் சேதமடைந்த வகுப்பறைகளை சீரமைக்கக் கோரி பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் பெற்றோர்கள் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்காததால், கடந்த சில நாள்களுக்கு முன்பு பள்ளி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் பள்ளியில் சமையலுக்கு வழங்கப்படும் பொருள்களை பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் பதுக்குவதாக மாணவர்கள் புகார் கூறுகின்றனர். இது குறித்து புகார் அளிக்கும் மாணவர்களும் மிரட்டப்படுகின்றனராம். எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு கோவிலாங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் முறைகேடுகளை ஆய்வு செய்து, மாணவர்களுக்கு தேவையான கழிப்பறை, சுற்றுச்சுவர், போதுமான வகுப்பறை கட்டடங்களை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.