விபத்தில் மூளைச் சாவு: இளைஞர் உடல் உறுப்புகள் தானம்
By DIN | Published On : 12th February 2019 07:07 AM | Last Updated : 12th February 2019 07:07 AM | அ+அ அ- |

இருசக்கர வாகன விபத்தில் பலத்த காயமடைந்து மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் திங்கள்கிழமை தானம் செய்யப்பட்டன.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி தாலுகா, அம்மன் பனையூரைச் சேர்ந்த ராமதாஸ் மகன் விக்னேஸ்வரன் (21). தனியார் கட்டுமான நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 1-ஆம் தேதி பணி முடிந்து வீட்டுக்கு திரும்பியபோது, கிழக்கு கடற்கரை சாலையில் பட்டினம்காத்தான் பகுதியில் இருசக்கர வாகனத்தில் இருந்து தடுமாறி கீழே விழுந்தார்.
இதில், தலையில் பலத்த காயமடைந்த விக்னேஸ்வரன் முதலுதவி மற்றும் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், கடந்த 7-ஆம் தேதி மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு மருத்துவப் பரிசோதனையில் விக்னேஸ்வரனின் மூளை நிரந்தரமாக செயல் இழந்ததை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.
அதையடுத்து விக்னேஸ்வரனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது தந்தை ஒப்புதல் அளித்தார். அதன்பேரில், மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் மருத்துவர் குழுவினர் 5 மணி நேர அறுவை சிகிச்சை மூலம் விக்னேஸ்வரனின் இரண்டு சிறுநீரகம், கல்லீரல் ஆகியவற்றை அகற்றி, அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வெவ்வேறு நோயாளிகளுக்கு பொருத்தினர். கண்கள் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு தானமாக அளிக்கப்பட்டது.