ஜபருல்லா தலைமறைவுக்கு குடும்பப் பிரச்னையே காரணம்: குடும்பத்தினர் விளக்கம்
By DIN | Published On : 12th February 2019 07:07 AM | Last Updated : 12th February 2019 07:07 AM | அ+அ அ- |

குடும்பப் பிரச்னை காரணமாகவே ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஜபருல்லா தலைமறைவாகவுள்ளார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
ராமநாதபுரம் பாரதி நகரைச் சேர்ந்த முகமது அமின் மகன் ஜபருல்லா (28). பொறியியல் தொழில்நுட்பப் பட்டதாரி. இவருக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் நடந்த நிலையில், 2017 ஆம் ஆண்டு திடீரென தலைமறைவானார். அதன்பின் கடந்த 2018 ஆம் ஆண்டு வீட்டுக்கு வந்தவர் தனது கல்விச் சான்று உள்ளிட்டவற்றுடன் மீண்டும் தலைமறைவானார். இதுகுறித்து கடந்த 2018 அக்டோபரில் அவரது மனைவி கேணிக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் கடந்த வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 8 ) வழக்குப் பதிந்தனர். இதனால் ஜபருல்லா தலைமறைவானது குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்த நிலையில் பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், இதுகுறித்து அவரது தந்தை முகமது அமின் மற்றும் குடும்பத்தினர் கூறியது:
குடும்பப் பிரச்னை காரணமாகவே எனது மகன் தலைமறைவாகியுள்ளார். அவருக்கு வேறு யாருடனும் ( எந்த இயக்கத்துடன்) தொடர்பும் கிடையாது. குடும்ப உறுப்பினர்கள் மீதான அதிருப்தி காரணமாகவே அவர் சென்னைக்கு சென்றுள்ளார். அவரை விரைவில் கண்டுபிடிக்க வேண்டும் என போலீஸாரிடம் தொடர்ந்து முறையிட்டு வருகிறோம். எனவே அவர் தலைமறைவானது குறித்து சந்தேகமளிப்பதாக வந்த தகவல்கள் சரியல்ல என்றார்.
ஜபருல்லா குடும்பப் பிரச்னையால் தலைமறைவாகியிருப்பதாக குடும்பத்தினர் கூறியதன் அடிப்படையில் தற்போது விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவரை கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.