முதுகுளத்தூரில் ஒப்புகைச் சீட்டுடன் கூடிய வாக்குப் பதிவு இயந்திர செயல் விளக்க முகாம்
By DIN | Published On : 12th February 2019 07:08 AM | Last Updated : 12th February 2019 07:08 AM | அ+அ அ- |

முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் பொதுமக்களுக்கு ஒப்புகைச் சீட்டுடன் கூடிய வாக்குப் பதிவு இயந்திர செயல் விளக்க முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு வட்டாட்சியர் மீனாட்சி தலைமை வகித்தார். பின்னர் அவர் கூறியதாவது: ஒவ்வொரு இடங்களிலும் பொதுமக்களிடத்தில் மாதிரி வாக்குப் பதிவு இயந்திரங்களை வைத்து பொதுமக்களை வாக்களிக்க கோரி எந்த சின்னத்திற்கு வாக்கு அளிக்கிறோம் என்பதை வாக்களித்தவர்களே உறுதி செய்திடலாம். இதனால் போலி வாக்கு அளிப்பவர்களை 100 சதவீதம் தடுக்கலாம் என்றார். முகாமில் மண்டல துணை வட்டாட்சியர் ஸ்ரீதர், சடையாண்டி, வட்ட வழங்கல் அலுவலர் முருகேசன் மற்றும் இளநிலை உதவியாளர்கள் கருப்புசாமி, கோகிலா, கதிரவன், சிவசக்தி, அருள்தாஸ் ஆகியோர் பொதுமக்களுக்கு மாதிரி வாக்குப் பதிவு இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்து விளக்கம் அளித்தனர்.
கமுதியில்...
கமுதி பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் வட்டாட்சியர் சிக்கந்தர் பபிதா தலைமையிலும், வட்ட வழங்கல் அலுவலர் காதர்முகைதீன், துணை வட்டாட்சியர் லலிதா (தேர்தல் பிரிவு), முதுநிலை வருவாய் ஆய்வாளர் முத்துராமலிங்கம், வருவாய் ஆய்வாளர் ராமசுப்பிரமணியன் (தேர்தல் பிரிவு) முன்னிலையிலும் ஒப்புகைச் சீட்டுடன் கூடிய வாக்குப் பதிவு இயந்திரம் குறித்த செயல் விளக்க முகாம் நடைபெற்றது. அபிராமம், செய்யாமங்கலம், கோவிலாங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள வாக்குச்சாவடி மையங்களில் இந்த முகாம் நடைபெற்றது. பிப். 9 முதல் 13 ஆம் தேதி வரை இந்த முகாம் நடைபெற உள்ளது.