பம்மனேந்தல் அரசு உயர்நிலைப் பள்ளிமாணவர்களுக்கு சத்துணவு வழங்கல்
By DIN | Published On : 04th January 2019 01:32 AM | Last Updated : 04th January 2019 01:32 AM | அ+அ அ- |

கமுதி அருகே அரசு உயர்நிலைப்பள்ளியில் 20 ஆண்டுகளுக்கு பிறகு தினமணி செய்தி எதிரொலியாக அங்கு படிக்கும் மாணவர்களுக்கு சத்துணவு புதன்கிழமை முதல் வழங்கப்பட்டது.
இப்பள்ளியில் 70-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். நடுநிலைப்பள்ளியாக இருந்த போதே, 20 ஆண்டுகளுக்கு முன்பு மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படுவது நிறுத்தப்பட்டது. இதனால் உள்ளூர் மாணவர்களுக்கு அருகிலுள்ள அரசு மாணவர் விடுதியில் மதிய உணவு வழங்கப்பட்டு, வெளியூர் மாணவர்கள் வீட்டிலிருந்து மதிய உணவை எடுத்து வந்து, சாப்பிட்டனர். இதனால் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆண்டுதோறும் மாணவர்கள் சேர்க்கை குறைந்து வந்தது. இதுகுறித்து, தினமணி நாளிதழில் டிச.23 ஆம் தேதி செய்தி வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து, புதன்கிழமை மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் புகழேந்தி (சத்துணவு), தலைமையிலும், கமுதி ஊராட்சி ஒன்றிய ஆணையர் தங்கப்பாண்டியன் முன்னிலையிலும், இப்பள்ளியில் படிக்கும் 36 மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. மாணவர்களுக்கு இனி வரும் காலங்களில் தொடர்ந்து மதிய உணவு தடையில்லாமல் வழங்கப்படும் என, கமுதி ஊராட்சி ஒன்றிய ஆணையர் தங்கப்பாண்டியன் தெரிவித்தார்.