பரமக்குடி விளையாட்டு அரங்கம் சீரமைக்கப்படுமா?
By DIN | Published On : 04th January 2019 01:24 AM | Last Updated : 04th January 2019 01:24 AM | அ+அ அ- |

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சந்தைக்கடைத் தெருவில் உள்ள விளையாட்டு அரங்கம் பராமரிப்பின்றி சுற்றுச்சுவர்கள் இடிந்து விழுந்ததால் அதை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பரமக்குடியில் அரசு கலைக்கல்லூரி, மாலை நேரக்கல்லூரி, அழகப்பா பல்கலைக் கழக அரசு உறுப்புக் கல்லூரி மற்றும் 10-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல் நிலைப் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் என பல்வேறு கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ளன. இவற்றில் படிக்கும் மாணவ- மாணவிகள் விளையாட்டில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக நகராட்சிக்கு சொந்தமான வாரச்சந்தை பகுதியில் கடந்த 2007-ஆம் ஆண்டு சுமார் 5 ஏக்கரில் ரூ.30 லட்சம் செலவில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் உள்விளையாட்டு அரங்கத்துடன், விளையாட்டு மைதானம் கட்டப்பட்டது.
மேய்ச்சல் நிலமாக மாறிய மைதானம்: இம்மைதானத்துக்கு சுற்றுச் சுவர் கட்டப்பட்டு, அதனை கண்காணிக்க பணியாளர்களும் நியமிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் தரமில்லாமல் கட்டப்பட்ட சுற்றுச்சுவரை வாரச் சந்தைக்கு வரும் வியாபாரிகள் தங்களுக்கு சாதகமாக ஆங்காங்கே உடைப்பை ஏற்படுத்தி சேதப்படுத்தி விட்டனர். மேலும் விளையாட்டு மைதானம் முறையாக பராமரிக்கப்படாததால் புல் வளர்ந்து மேய்ச்சல் நிலமாக மாறிவிட்டது.
கழிவுநீர் கலப்பு: மைதானத்தை சுற்றிலும் உள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனை மற்றும் மாணவியர் விடுதியிலிருந்து வெளியேறும் கழிவுநீர் அனைத்தும் விளையாட்டு மைதானம் அமைந்துள்ள பகுதியிலேயே விடப்படுகிறது. இதனால் கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேடாக உள்ளது. இதனால் இப்பகுதியில் விளையாட்டுப் போட்டிகள் நடத்த யாரும் ஆர்வம் காட்டுவதில்லை.
விளையாட்டு வீரர்கள் தங்குவதற்கும், சதுரங்கம், கேரம் போன்ற விளையாட்டுப் போட்டிகள் நடத்துவதற்காக இரண்டு மாடி கட்டடம் கட்டப்பட்டிருந்தது. இக்கட்டடத்தில் இருந்த சன்னல் கதவுகளின் கண்ணாடிகளை சமூக விரோதிகள் உடைத்து சேதப்படுத்தி விட்டனர். மேலும் மின் விளக்குகளும் சேதமடைந்து இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக இப்பகுதிசமூக விரோதிகளின் கூடாரமாகி விட்டது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்தாலும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. இதுபோன்ற விளையாட்டு மைதானங்கள் மாவட்ட அதிகாரிகளால் முறையாக கண்காணித்து பராமரிக்கப்படாததால் இப்பகுதி இளைஞர்கள் விளையாட்டுத்துறையில் பின்தங்கியுள்ளனர்.
எனவே இவ்விளையாட்டு மைதானத்தை முறையாக பராமரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.