பிளக்ஸ் போர்டு வைத்த தகராறில் ஒருவருக்கு வெட்டு: 4 பேர் மீது வழக்கு
By DIN | Published On : 04th January 2019 01:30 AM | Last Updated : 04th January 2019 01:30 AM | அ+அ அ- |

ராமநாதபுரம் மாவட்டம், பார்த்திபனூர் அருகே ஆங்கிலப் புத்தாண்டு தினத்தன்று பிளக்ஸ் போர்டு வைத்ததில் ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து, வியாழக்கிழமை ஒருவர் வெட்டப்பட்டதில் போலீஸார் 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அருங்குளம் கிராமம் யாதவர் குடியிருப்பில் ஆங்கிலப் புத்தாண்டு தினத்தில் பிளக்ஸ் போர்டு வைப்பதில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு 3 பேர் காயமடைந்தனர். இதில், இரு தரப்பைச் சேர்ந்த 8 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில், பிளக்ஸ் போர்டு வைத்த தரப்பைச் சேர்ந்த அழகர்சாமி மகன் கருப்புராஜா (30) என்பவர், பார்த்திபனூர் காவல்காரன் ஊருணி பகுதியில் வந்துகொண்டிருந்தார். அப்போது, மற்றொரு தரப்பைச் சேர்ந்த மதியழகன் மகன் சுபாஷ், அவரது சகோதரர் ஆகாஸ், கருப்பையா மகன் பிரசாத், முருகன் மகன் அஜித் ஆகியோர் சேர்ந்து, கருப்புராஜாவை வாளால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதில், பலத்த காயமுற்ற அவர், பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து பார்த்திபனூர் காவல் நிலையத்தில் கருப்புராஜா அளித்த புகாரின்பேரில், போலீஸார் சுபாஷ், ஆகாஸ், பிரசாத், அஜித் ஆகிய 4 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.