ராமேசுவரத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடம் அதிகக் கட்டணம் வசூலிக்கக் கூடாது
By DIN | Published On : 07th January 2019 05:46 AM | Last Updated : 07th January 2019 05:46 AM | அ+அ அ- |

ராமேசுவரத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடம் தனியார் விடுதிகள், ஆட்டோ ஓட்டுநர்கள் அதிக கட்டணம் வசூலிக்கக் கூடாது என மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் எச்சரிக்கை விடுத்தார்.
ராமேசுவரத்தில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக மாவட்ட ஆட்சியர் தலைமையில் தீவு அபிவிருத்தி குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் ராமேசுவரம் வர்த்த சங்கம், ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம், ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தினர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் ஆட்சியர் வீரராகவராவ் பேசியது: ராமேசுவரத்தில் சுற்றுலாவை மேம்படுத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். சுற்றுலாப் பயணிகளிடம் விடுதிகள், ஆட்டோக்கள் அதிக கட்டணம் வசூலிக்கக் கூடாது.
ஹோட்டல்களில் தரமான உணவுகளை நிர்ணயிக்கப்பட்ட விலையில் வழங்கிட வேண்டும். திட்டகுடி கார்னர் பகுதியில் இருந்து ஒரு வழிச்சாலையாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
காவல்துறை மூலம் நிர்ணயிக்கப்படும் இடத்தில் மட்டுமே வாகனங்களை நிறுத்த வேண்டும் என்றார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி, ஊராட்சிகள் துணை இயக்குநர் கேசவதாசன், வருவாய் கோட்டாட்சியர் சுமன், காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் மகேஸ், நகராட்சி ஆணையர் வீரமுத்துக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.