ராமநாதபுரம் அருகே ஏர்வாடியில் உள்ள மகான் அல் குத்பு சுல்தான் செய்யது இப்ராஹிம் ஷகீது ஒலியுல்லா பாதுஷா நாயகம் தர்ஹாவில் சந்தனக் கூடு திருவிழா கொடியேற்றத்துடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
ராமநாதபுரம் அருகே உள்ள ஏர்வாடியில் சந்தனக் கூடு திருவிழா ஒவ்வொரு ஆண்டும் மதநல்லிணக்க ஒருமைப்பாட்டு விழாவாக நடத்தப்படும்.
இந்த விழாவில், தமிழகம், கேரளம், ஆந்திரம், கர்நாடகம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் இருந்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வர். இந்தாண்டு ஜூலை 4 ஆம் தேதி பாதுஷா நாயகத்தின் மவுலீது ( புகழ் மாலை) உடன் விழா தொடங்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, தர்ஹா வளாகத்தில் சனிக்கிழமை (ஜூலை 13 ) மாலை அடி மரம் ஏற்றப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை ( ஜூலை 14 ) மாலை 4 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட கூடு ஊர்வலமாக தர்காவுக்கு கொண்டுவரப்பட்டு இரவு 7:40 மணியளவில் கொடியேற்றப்பட்டது.
இதைத் தொடர்ந்து ஜூலை 26 ஆம் தேதி மாலையில் தொடங்கும் சந்தனக் கூடு ஊர்வலம், ஜூலை 27 ஆம் தேதி அதிகாலை வரை நடக்கிறது. இதன் தொடர் நிகழ்வாக புனித சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெறும்.
இவ்விழாவுக்காக ராமநாதபுரத்திலிருந்து ஏர்வாடிக்கு மாவட்ட நிர்வாகம் சிறப்பு பேருந்து வசதிகள் மற்றும் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை, தங்கும் இடம் உள்ளிட்ட வசதிகளை செய்துள்ளது. விழா ஏற்பாடுகளை ஏர்வாடி தர்ஹா ஹக்தார் பொதுக்குழுவினர் செய்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.