ஆசிரியர் தகுதி முதல் தாள் தேர்வில் ராமநாதபுரத்தில் 2,929 பேர் பங்கேற்பு

ஆசிரியர் தகுதிக்கான முதல் தாள் தேர்வில் ராமநாதபுரத்தில் 2,929 பேர் சனிக்கிழமை பங்கேற்று எழுதினர். 


ஆசிரியர் தகுதிக்கான முதல் தாள் தேர்வில் ராமநாதபுரத்தில் 2,929 பேர் சனிக்கிழமை பங்கேற்று எழுதினர். 
    தமிழகத்தில் ஆசிரியர் பணிக்கான தகுதித் தேர்வு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறுகிறது. இத் தேர்வுக்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தம் 11,466 பேர் விண்ணப்பித்துள்ளனர். முதல் நாளான சனிக்கிழமை இடைநிலை ஆசிரியர்களுக்கான பணித் தேர்வுக்கான முதல் தாள் தேர்வு நடைபெற்றது. 
  மாவட்ட அளவில் முதல் தாள் தேர்வுக்கு 9 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அதன்படி ராமநாதபுரம் நகரில் புனித ஆன்ட்ரூஸ், வேலுமாணிக்கம் மெட்ரிக்குலேசன், ஏ.வி.எம்.எஸ். மெட்ரிக்குலேசன், டி.டி.விநாயகர் மெட்ரிக்குலேசன், சையது அம்மாள் மெட்ரிக்குலேசன் ஆகிய பள்ளிகளிலும், பரமக்குடியில் ஆயிர வைஸ்யா மேல்நிலைப் பள்ளியில் 2 மையங்கள், கே.ஜே.இ.எம்.மேல்நிலை மற்றும் செளராஷ்டிரா மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றில் தேர்வு மையங்கள் அமைந்திருந்தன. இம்மையங்களில் முதல் தாள் தேர்வெழுத  மொத்தம் 3,369 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. 
  தேர்வெழுத வந்தவர்களிடம் தேர்வு மைய அறைகளுக்கு முன்பு சோதனையிட்ட பிறகே அனுமதிக்கப்பட்டனர். செல்லிடப் பேசி உள்ளிட்டவை அனுமதிக்கப்படவில்லை. தேர்வுக்கு அனுமதி பெற்றவர்களில் 440 பேர் வரவில்லை.
 ராமநாதபுரம், பரமக்குடியில் அமைக்கப்பட்ட தேர்வு மையங்களை மாநில இடைநிலைக் கல்வி இணை இயக்குநர் ச.கோபிதாஸ் நேரடியாகப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அவருடன் மாவட்டக் கல்வி அலுவலர் பிரேம் உள்ளிட்டோர் சென்றனர். 
 தேர்வு மைய வளாகங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. காலை 10 மணிக்குத் தொடங்கிய தேர்வானது பகல் 1 மணி வரை நடைபெற்றது. தேர்வில் பங்கேற்ற பல பெண்கள் கைக்குழந்தைகளுடன் வந்திருந்தனர். அவர்கள் தேர்வெழுதும் அறைக்குள் சென்றதும், அவர்களது தாய்மார்கள் மற்றும் கணவர் உள்ளிட்டோர் குழந்தைகளை அப்பகுதியில் இருந்த மரங்களில் தொட்டில் கட்டி உறங்கவைத்து பார்த்துக் கொண்டனர்.  தேர்வில் அறிவியல், கணித வினாக்கள் கடினமாக இருந்ததாக தேர்வு எழுதியவர்கள் தெரிவித்தனர். 
      இரண்டாம் தாள் தேர்வானது மாவட்டத்தில் 22 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெறவுள்ளது. இதில், 8 மையங்கள் பரமக்குடியிலும், பட்டணம்காத்தானில் இரு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. ராமநாதபுரம் நகரில் 12 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதில் 8,097 பேர் தேர்வெழுத அழைக்கப்பட்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com