குடிநீர் சோதனை சாதனங்கள் ஊராட்சிகளுக்கு வழங்கல்
By DIN | Published On : 09th June 2019 02:46 AM | Last Updated : 09th June 2019 02:46 AM | அ+அ அ- |

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 429 ஊராட்சிகளுக்கும் குடிநீரைச் சோதிக்கும் சாதனங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடும் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் மற்றும் ஆழ்துளைக் கிணறுகள், கண்மாய் கரையோர திறந்தவெளி கிணறுகள் ஆகியவற்றின் மூலம் தண்ணீர் பெறப்பட்டு பொது மக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
குடிநீர் தரமானதாக உள்ளதா என்பதை அறிய தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் பகுதி வாரியாக குடிநீர் சோதனை நடந்து வருகிறது. மேலும், அந்தந்த ஊராட்சிப் பகுதிகளில் குடிநீர் பரிசோதனைக்கு பயிற்சி பெற்றவர்கள் மூலம் சோதனை நடத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குடிநீர் பரிசோதனைக்கான சாதனங்கள் அடங்கிய 429 பண்டல்கள் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர் அலுவலக வளாகத்தில் கடந்த சில நாள்களாக குவித்து வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் 50 ஊராட்சிகளுக்கு மட்டுமே பண்டல்கள் வழங்கப்பட்ட நிலையில், மீதமுள்ளவை வளாகத்திலேயே குவித்து வைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறியது: பகுதி வாரியாக குடிநீர் சோதனைக்கான சாதனங்கள் அடங்கிய பண்டல்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. ஓரிரு நாள்களில் அனைத்து ஊராட்சிகளுக்கும் சாதனங்கள் விநியோகிக்கப்பட்டுவிடும் என்றனர்.
இதற்கிடையே தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உயர் அதிகாரிகள் ராமேசுவரம், ராமநாதபுரத்தில் குடிநீர் விநியோகம் குறித்த ஆய்வை சனிக்கிழமை மேற்கொண்டனர்.