அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக தலைமையாசிரியர் மீது வழக்கு
By DIN | Published On : 14th June 2019 07:47 AM | Last Updated : 14th June 2019 07:47 AM | அ+அ அ- |

ராமநாதபுரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டு அலுவலரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக வாலாந்தரவையில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான உண்டு, உறைவிடப் பள்ளி தலைமை ஆசிரியர் மீது போலீஸார் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் வாலாந்தரவையில் மாற்றுத்திறனாளிகளுக்கான உண்டு, உறைவிடப் பள்ளி செயல்படுகிறது. இப்பள்ளியின் தலைமை ஆசிரியராக தசரதபூபதி உள்ளார். இந்நிலையில் பள்ளிக்கான அரசு அங்கீகாரத்துக்கான ஆய்வில் மாவட்ட மாற்றுத்திறனாளி மேம்பாட்டு திட்ட அதிகாரி தங்கவேல் ஈடுபட்டுள்ளார்.
இவர் வாலாந்தரவையில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான உண்டு, உறைவிடப் பள்ளியில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை ஆய்வு செய்த போது, அங்கு தலைமை ஆசிரியர் இல்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து புதன்கிழமை காலையில் பள்ளிக்குச் சென்றுள்ளார். அப்போதும் தலைமை ஆசிரியர் வரவில்லையாம்.
அதிகாரி வந்த தகவலை அடுத்து தாமதமாக பள்ளிக்கு வந்த தலைமை ஆசிரியர் ஆய்வுக்கு வந்த மாற்றுத்திறனாளி மேம்பாட்டு அதிகாரி தங்கவேலுவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது அதிகாரியை தாக்க வந்ததுடன் அவரது செல்லிடப்பேசியையும் சேதப்படுத்தியதாக புகார் எழுந்தது.
இச்சம்பவம் குறித்து மாற்றுத்திறனாளி மேம்பாட்டு திட்ட அலுவலர் தங்கவேல் கேணிக்கரை போலீஸில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் மாற்றுத்திறனாளி உண்டு உறைவிடப் பள்ளி தலைமை ஆசிரியர் தசரதபூபதி, அவரது மனைவி ஆகியோர் மீது அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.