ராமநாதபுரத்தில் "நிபா' வைரஸ் பாதிப்பை கண்காணிக்க சிறப்புக் குழுக்கள்
By DIN | Published On : 14th June 2019 07:51 AM | Last Updated : 14th June 2019 07:51 AM | அ+அ அ- |

ராமநாதபுரம் மாவட்டத்தில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவலைத் தடுக்கும் வகையில் கண்காணிப்புப் பணிக்கு சிறப்பு குழுக்களை சுகாதாரத் துறையினர் அமைத்துள்ளனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு கேரள மாநிலத்தில் ஏராளமானோர் நிபா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். இந்த நிபா வைரஸானது வெளவால் மூலம் பரவுவதாகத் தெரியவந்துள்ளது. இதனால், வெளவால் கடித்த பழங்களை சாப்பிடக்கூடாது என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் நிபா வைரஸ் பாதிப்பைக் கண்காணிக்க சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அக்குழுக்களில் 38 சுகாதார ஆய்வாளர்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் 6 அரசு மருத்துவமனைகள், 28 ஆரம்ப சுகாதார நிலையங்களில் தினமும் காய்ச்சல் பாதிப்புக்கு சிகிச்சைக்கு வருவோரைக் கண்காணித்து அவர்கள் குறித்த முழுவிவரங்களையும் சேகரித்து வருகின்றனர்.
ராமநாதபுரம் நகரில் மட்டும் 2
சுகாதார ஆய்வாளர்கள் கொண்ட குழுவினர் 7 தனியார் மருத்துவமனைகளுக்கு தினமும் சென்று காய்ச்சல் பாதித்தவர்களை கணக்கெடுத்து அவர்கள் வீட்டுக்கே
சென்று விசாரித்து அறிக்கை தயாரித்தும் வருகின்றனர்.
அதன்படி தினமும் குறைந்தது 5 பேர் காய்ச்சல் பாதிப்பில் இருப்பதும், அவர்களுக்கு நிபா வைரஸ் பாதிப்பு இல்லாததும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவிக்கின்றனர்.
ராமநாதபுரம் நகரில் கொய்யா, மாம்பழங்கள் மற்றும் நாவல் பழங்கள் தற்போது அதிகம் விற்கப்படுகின்றன. அவை கேரளப் பகுதியிலிருந்து வாங்கி வரப்படுகின்றனவா என்றும் சுகாதாரத் துறை சார்பில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
மேலும், ராமநாதபுரம் மாவட்டத்தில் விளைவிக்கப்படும் கொய்யா, மா உள்ளிட்ட பழங்கள் வெளவால்களால் கடித்த நிலையில் விற்பனைக்கு வருகின்றனவா என்றும் சுகாதாரத் துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட மலேரியா அலுவலர் பி.உதயகுமாரிடம் கேட்டபோது, நிபா வைரஸ் பாதிப்பு நமது மாவட்டத்தில் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அணில், வெளவால்கள் கடித்த பழங்களை விற்பனைக்கு கொண்டு வரவேண்டாம் என்றும், மரங்களின் கீழே கிடக்கும் பழங்களை மக்கள் சாப்பிட வேண்டாம் என்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம் என்றார்.