மர்மக்காய்ச்சல் பாதித்த கிராமத்தில் 17 நாள்களாக மருத்துவக் குழு முகாம்
By DIN | Published On : 06th March 2019 07:32 AM | Last Updated : 06th March 2019 07:32 AM | அ+அ அ- |

கமுதி அருகே மர்மக் காய்ச்சல் பாதித்த கிராமத்தில் மருத்துவ குழுவினர் 17 நாள்கள் தங்கி சிகிச்சை அளித்து வருவதால், காய்ச்சல் கட்டுக்குள் வந்துள்ளதாக மருத்துவக்குழுவினர் தெரிவித்தனர்.
கமுதி அருகே உள்ள பூமாவிலங்கையில் பள்ளி மாணவர்கள், முதியவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் கமுதி அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகளில் வாரக் கணக்கில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் கிராம மக்கள் 100 நாள் வேலைத்திட்டத்திற்கும், மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டது.
இதுகுறித்து தினமணி நாளிதழில் செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து, பரமக்குடி துணை சுகாதார இணை இயக்குநர் மீனாட்சி உத்தரவின்பேரில், பெருநாழி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் நமச்சிவாயம் தலைமையில், வட்டார சுகாதார ஆய்வாளர் சக்தி கணேஷ் அடங்கிய சுகாதார பணியாளர்கள் குழு 17 நாள்களாக பூமாவிலங்கை அரசு தொடக்கப் பள்ளியில் தங்கி, சிகிச்சை அளித்து வருகிறது.
மேலும் மஸ்தூர் பணியாளர்கள் தெருக்களில் பிளீச்சிங் பவுடரை தெளித்தும், கொசு மருந்து அடித்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது காய்ச்சல் முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரபட்டுள்ளதாக, பெருநாழி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் நமச்சிவாயம் தெரிவித்தார்.
இந்நிலையில் கமுதி அரசு மருத்துவமனையில் மர்ம காய்ச்சலால் பூமாவிலங்கை கிராமத்தில் இருந்து 20 க்கும் மேற்பட்டோர் தற்போது வரை மர்மக் காய்ச்சலால் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மருத்துவமனையில் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லையென என அவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து மருத்துவமனை அதிகாரி ஒருவர் கூறியது: மர்மக் காய்ச்சலில் பாதிக்கப்பட்டு வரும் நோயாளிகளுக்கு தனி அறை அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் பலர் குணமடைந்து ஊர் திரும்பியுள்ளனர் என்றார்.