கமுதி அருகே பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ள சாலையால், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
கமுதி அருகே 60 குடும்பங்கள் வசிக்கும் புளிச்சிகுளத்துக்கு சாலை, குடிநீர், கழிவுநீர் கால்வாய், போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. வெளியூர்களுக்குச் செல்லவேண்டுமெனில், புளிச்சிகுளத்திலிருந்து 2 கி.மீ. தொலைவிலுள்ள தலைவநாயக்கன்பட்டி விலக்கு சாலைக்குச் சென்று, அங்கிருந்து கமுதி -அருப்புக்கோட்டை விலக்கு சாலைக்கு செல்ல வேண்டும்.
தலைவநாயக்கன்பட்டி விலக்கு பகுதியிலிருந்து புளிச்சிகுளத்துக்குச் செல்லும் 2 கி.மீ. தொலைவிலான சாலை 18 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது. அதன்பின்னர் இதுவரை சீரமைக்கப்படாததால், தார் சாலை உருக்குலைந்து, போக்குவரத்துக்கு பயனற்ற நிலையில் உள்ளது.
இதனால், வாகனங்களை இயக்க முடியாமல் 6 கி.மீ. தொலைவு சுற்றி கீழராமநதி விலக்குச் சாலைக்குச் சென்று, அங்கிருந்து கமுதிக்கு 12 கி.மீ. தொலைவு பயணிக்க வேண்டும். மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட அவசரத் தேவைகளுக்கு கூட, கமுதி, அருப்புக்கோட்டைக்கு செல்ல வேண்டியிருப்பதால், இக் கிராம மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
எனவே, இந்த சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராமத்தினர் வலியுறுத்துகின்றனர்.