ராமநாதபுரம் நகராட்சியில் பாதாளச் சாக்கடை உரிய பராமரிப்பில்லாததால், வெள்ளிக்கிழமை ஒரே நாளில் நகரில் 40 இடங்களில் கழிவு நீர் வெளியேறி சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டது.
ராமநாதபுரம் நகராட்சியில் கடந்த 2013 ஆம் ஆண்டு பாதாளச் சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதன்படி, நகரில் 63.80 கிலோ மீட்டர் தொலைவுக்கு அனைத்துத் தெருக்களிலும் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. இக்குழாய்கள் மூலம் தற்போது வரை 33 வார்டுகளில் மொத்தம் 10,505 கட்டடங்களுக்கு சாக்கடை இணைப்பு வழங்கப்பட்டுள்ளன.
பாதாளச் சாக்கடை பராமரிக்கும் பொறுப்பை நகராட்சிப் பொறியாளர் பிரிவும், கழிவுநீர் சுத்திகரிப்பு மைய பராமரிப்பை குடிநீர் வடிகால் வாரியமும் மேற்கொண்டு வருகின்றன. ஆனால், சாக்கடை பராமரிப்பில் பொறியாளர் பிரிவினர் போதிய கவனம் செலுத்துவதில்லை எனப் புகார் எழுந்துள்ளது.
பாதாளச் சாக்கடை இணைப்புக்கு வீடுகளுக்கு மாதம் ரூ.100, வணிக நிறுவனங்களுக்கு ரூ.200 என கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதன்படி, மாதம் ரூ.15 லட்சத்துக்கும் அதிகமான வருவாய் கிடைக்கிறது. ஆனால், போதிய பராமரிப்பு இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில், ராமநாதபுரத்தில் உள்ள மாவட்டத் தலைமை மருத்துவமனையில் பாதாளச் சாக்கடை பராமரிப்புக்காக நகராட்சி ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வசூலிக்கிறது. ஆனால், அங்கு வாகனங்கள் நிறுத்துமிடம், குழந்தைகள் சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட பல இடங்களில் கழிவு நீர் சாலையில் தேங்கியுள்ளன. மேலும், நகரில் வழிவிடு முருகன் கோயில், அண்ணாநகர், கோட்டை மேட்டுத்தெரு, மூலக்கொத்தளம் உள்ளிட்ட 40 இடங்களில் கழிவு நீர் சாலைகளில் தேங்கின. ஒரே நேரத்தில் அதிக இடங்களில் கழிவு நீர் தேங்கியதால், நகரில் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக நகரப் பொறியாளர் பிரிவினரிடம் கேட்டபோது, அவர்கள் கூறியது:
பாதாளச் சாக்கடையில் பொதுமக்கள் துணிகள், பிளாஸ்டிக் பைகளை போடுவதால் அடைப்பு ஏற்பட்டு, சாலையில் கழிவு நீர் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கழிவு நீர் உறிஞ்சும் வாகனத்தின் மூலம் பாதாளச் சாக்கடை அடைப்பு சீர்படுத்தப்பட்டு வருகிறது என்றனர்.