கல்லல் அருகே இறந்தவரின் சடலத்தை அடக்கம் செய்ய எதிர்ப்பு: 6 பெண்கள் மீது வழக்கு
By DIN | Published On : 05th May 2019 01:24 AM | Last Updated : 05th May 2019 01:24 AM | அ+அ அ- |

சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே அரண்மனை சிறுவயலில் இறந்தவரின் சடலத்தை அடக்கம் செய்யவிடாமல் தடுத்த 6 பெண்கள் மீது சனிக்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கல்லல் அருகே அரண்மனைசிறுவயல் கிராமத்தில் தந்தை பெரியார் நகர் உள்ளது. இங்கு ஒரு மதத்தை சேர்ந்தவர்களின் மயானம் உள்ளது. இதன் அருகில் மற்றொரு மதத்தை சேர்ந்த 40 குடும்பங்கள் வசித்து வருகின்றன.
நோய் தொற்று ஏற்படுவதால் சடலங்களை அங்கு புதைக்க அவர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர். இதுதொடர்பாக காரைக்குடி வட்டாட்சியர் பாலாஜி தலைமையில் நடைபெற்ற சமாதானக் கூட்டங்களில் உடன்பாடு எட்டப்படவில்லை.
இந்நிலையில் இறந்த ஒருவரின் சடலத்தை அடக்கம் செய்ய சனிக்கிழமை அங்கு ஒரு தரப்பினர் வந்தனர். சடலத்தை அடக்கம் செய்யக்கூடாது என எதிர்தரப்பைச் சேர்ந்த பெண்கள் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இரு தரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அங்கு வந்த காரைக்குடி வட்டாட்சியர் பாலாஜி போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி இப்பிரச்னைக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதனைத்தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்த பெண்களை போலீஸார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனைத்தொடர்ந்து சடலம் எடுத்துச் சென்று அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் கீழப்பூங்குடி கிராம நிர்வாக அலுவலர் கணேசன் கொடுத்தப் புகாரின் பேரில் சடலத்தை எடுத்துச் செல்ல எதிர்ப்புத் தெரிவித்த காளை மனைவி சிட்டாள், சுப்பிரமணி மனைவி பஞ்சம்மாள், சேகர் மனைவி மகேஸ்வரி, உடையப்பன் மனைவி நாகம்மாள், தங்கவேல் மனைவி மீனாட்சி உள்பட 6 பேர் மீது கல்லல் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...