நயினார்கோவில் நாகநாத சுவாமி கோயிலில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு
By DIN | Published On : 15th May 2019 07:45 AM | Last Updated : 15th May 2019 07:45 AM | அ+அ அ- |

ராமநாதபுரம் மாவட்டம், நயினார்கோவிலில் உள்ள நாகநாத சுவாமி திருக்கோயில் வைகாசி வசந்த உற்சவத்தை முன்னிட்டு, பஞ்சமூர்த்திகள் புறப்பாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்துக்குப் பாத்தியமான இக்கோயில் வைகாசி வசந்த உற்சவ விழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டுக்கான விழா கடந்த மே 9 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், 6-ஆம் நாளான மே 14-ஆம் தேதி காலை 9 மணியளவில் முருகன், வள்ளி, தெய்வானை, விநாயகர்ஆகிய தெய்வங்களின் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு தேரோடும் வீதிகளில் நடைபெற்றது.
வழிநெடுகிலும், பக்தர்கள் பஞ்சமூர்த்திகளை வழிபட்டனர். இதைத் தொடர்ந்து, சமணர்களுக்கு முக்தி கொடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை, இரவு வேளைகளில் அம்மன் திருஞானசம்பந்தருக்கு திருமுலைப்பால் ஊட்டலும், வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதிஉலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக, மே 17-ஆம் தேதி காலை 8 மணியளவில் தேரோட்டம் நடைபெற உள்ளது. விழாவுக்கான ஏற்பாட்டினை, ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் சேதுபதிராணி ஆர்.பி.கே. ராஜேஸ்வரி நாச்சியார், சரக பொறுப்பாளர் எம்.பி. வைரவ சுப்பிரமணியன், திவான் மற்றும் நிர்வாக செயலர் கே. பழனிவேல்பாண்டியன் ஆகியோர் செய்து வருகின்றனர்.