ஸ்ரீ தில்லைநாச்சி அம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா
By DIN | Published On : 15th May 2019 07:43 AM | Last Updated : 15th May 2019 07:43 AM | அ+அ அ- |

ராமேசுவரம் அடுத்த சாத்தக்கோன்வலசையில் அமைந்துள்ள மிகவும் பழைமை வாய்ந்த ஸ்ரீ தில்லை நாச்சி அம்மன் கோயிலில் முதலாம் ஆண்டு பூச்சொரிதல் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட சாத்தக்கோன்வலசையிலுள்ள தில்லை நாச்சி அம்மன், பத்துக்கும் மேற்பட்ட கிராமப் பொதுமக்களின் குலதெய்வமாக விளங்கி வருகிறது. இக் கோயிலில் பூச்சொரி திருவிழா காலையில் கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.
மாலை 4 மணி அளவில், கோயிலில் இருந்து 200-க்கும் மேற்பட்ட பெண்கள் பூக்கூடையுடன் அம்பாள் நகர்வலம் நிகழ்ச்சி தொடங்கியது. இந்த நகர்வலமானது, உடையார்வலசை,பிள்ளைமடம், சுந்தரமுடையான், சீனியப்பா தர்ஹா, பூவன்குடியிருப்பு, சின்னபால்குளம், பெரிய பால்குளம், சாத்தக்கோன் வலசை, அரியமான், டி.என்.குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளின் வழியாக நடைபெற்றது.
இரவில் ஆலயத்தை அடைந்ததும், பூச்சொரிதல் விழா நடைபெற்றது. பக்தர்கள் கொண்டு வந்திருந்த பூக்களால் அம்பாளுக்கு சிறப்புப் பூஜைகள் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
இத்திருவிழாவில் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை, கிராமத் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.