கமுதி அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி பலி
By DIN | Published On : 19th May 2019 04:22 AM | Last Updated : 19th May 2019 04:22 AM | அ+அ அ- |

கமுதி அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
அபிராமம் அடுத்துள்ள தரைக்குடி அருகே கள்ளிக்குளத்தை சேர்ந்த விவசாயி பூமிநாதன் (56). கமுதி மற்றும் அபிராமம் பகுதியில் 4 நாள்களுக்கு முன் பலத்த சூறாவளி காற்று வீசியதில், விவசாயி பூமிநாதன் வீட்டின் முன் உள்ள மின் கம்பிகள் அறுந்து தரையில் விழுந்துள்ளன. கடந்த 2 நாள்களாக அறுந்து கிடக்கும் மின் கம்பிகளை சீரமைக்கக்கோரி, கள்ளிக்குளம் கிராம மக்கள், அபிராமம் மின் வாரிய அலுவலகத்தில் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் அறுந்து கிடக்கும் மின் கம்பியை பொதுமக்கள் யாரேனும் மிதித்தால் பாதிக்கப்படகூடும் எனக் கருதிய பூமிநாதன், அதை கம்பால் தள்ளி அப்புறப்படுத்த முயன்றுள்ளார். இதில், எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து பூமிநாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து பூமிநாதன் மனைவி பஞ்சவர்ணம் அளித்த புகாரின் பேரில், அபிராமம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.