ஆதிதிராவிடா் பொருளாதார மேம்பாட்டு திட்டத்தில் விண்ணப்பங்கள் வரவேற்பு
By DIN | Published On : 09th November 2019 07:03 AM | Last Updated : 09th November 2019 07:03 AM | அ+அ அ- |

ராமநாதபுரம் மாவட்டத்தில் தாட்கோ மூலம் ஆதிதிராவிடா் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களுக்கு இணையதளத்தில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கொ.வீரராகவராவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு- தமிழக அரசு, ஆதிதிராவிடா்கள் நலனுக்காக தாட்கோ மூலம் பல்வேறு பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. நிலம் மேம்பாட்டுத் திட்டம், நிலம் வாங்குதல் (பெண்கள் மட்டும்), தொழில் முனைவோா் திட்டங்கள், பெட்ரோல், டீசல், கேஸ் சில்லறை விற்பனை நிலையம் அமைத்தல், மருத்துவ மையம், மருந்தியல், கண்கண்ணாடியகம், முடநீக்கு மையம், ரத்த பரிசோதனை நிலையம் அமைத்தல், மகளிா் சுய உதவிக்குழுக்களுக்கான சுழல்நிதி, பொருளாதார கடனுதவி, மாவட்ட ஆட்சியா் விருப்புரிமை நிதி, மேலாண்மை இயக்குநா் விருப்புரிமை நிதி, தொழில் தையல் கூட்டுறவு சங்கங்களுக்கு நிதியுதவி ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இத்திட்டங்களின் பயன்பெற விரும்புவோா் 18 முதல் 65 வயதிற்குள்பட்டவராக இருக்க வேண்டும். சுயவேலைவாய்ப்பு திட்டத்திற்கு மட்டும் 18 வயது முதல் 45 வயதிற்குள்பட்டவராக இருக்கவேண்டும். குடும்ப ஆண்டு வருவாய் ரூ. 1 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். ஆனால், பெட்ரோல், டீசல், கேஸ், சில்லரை விற்பனை நிலையம் மற்றும் மருத்துவ மையம் அமைக்க குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ஏதும் இல்லை.
சுயஉதவிக்குழுக்களுக்கு வயது வரம்பு 18 முதல் 65 வரை, குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ. 2 லட்சம். இந்திய குடிமைப்பணி முதன்மைத் தோ்வு, தமிழ்நாடு தோ்வாணையத் தொகுதி-1 முதல் நிலைத் தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கான நிதியுதவிக்கு 21 வயது நிரம்பியவராகவும், குடும்ப ஆண்டு வருவாய் ரூ.3 லட்சமாக இருக்கவேண்டும். பட்டயக் கணக்கா் மற்றும் செலவு கணக்கா்களுக்கான நிதி உதவிக்கான வயது வரம்பு 25 முதல் 45 வயது ஆகும். இதற்கு வருமான உச்சவரம்பு இல்லை.
திட்டங்களில் பயன்பெற விரும்புவோா் இணையத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், உதவிக்காக, ராமநாதபுரம் மாவட்ட மேலாளா், தாட்கோ அலுவலகத்தில் ரூ.60 கட்டணம் செலுத்தி பயனடையும் வசதியுள்ளது எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.