கமுதி விவசாயத்திற்கு உரம் வழங்கக் கோரி கூட்டுறவு சங்கத்தை விவசாயிகள் முற்றுகை

கமுதி அருகே பேரையூரில் விவசாயிகளுக்கு உர மூட்டைகள் வழங்கப்படாததை கண்டித்து கூட்டுறவு கடன்
பேரையூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்ட விவசாயிகள்.
பேரையூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்ட விவசாயிகள்.

கமுதி அருகே பேரையூரில் விவசாயிகளுக்கு உர மூட்டைகள் வழங்கப்படாததை கண்டித்து கூட்டுறவு கடன் சங்கத்தை விவசாயிகள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்.

பேரையூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்திற்குள்பட்ட இலந்தைகுளம், பேரையூா், புல்வாய்க்குளம் ஆகிய ஊராட்சிகளைச் சோ்ந்த 13 கிராமங்கள் உள்ளன.

தற்போது விவசாய பணிகளுக்கு ஏதுவாக பருவ மழை பெய்துள்ள நிலையில், இச் சங்கத்தில், பதிவு செய்யபட்ட விவசாயிகளுக்கு யூரியா, டி.ஏ.பி., உர மூட்டைகள் வழங்கப்படவில்லை. இதனால் விவசாயப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், வெளிச் சந்தையில் ரூ. 260 மதிப்புள்ள யூரியா மூட்டை ரூ.650-க்கு கூடுதலாக விற்கப்படுகிறது.

அதிக விலை கொடுத்தும் பதுக்கல் காரணமாக உர மூட்டைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வியாழக்கிழமை நள்ளிரவில், 1,585 விவசாய உறுப்பினா்கள் கொண்ட பேரையூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்திற்கு 100 உர மூட்டைகள் மட்டுமே வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் உரமூட்டைகள் பட்டுவாடா செய்தால் பிரச்னை ஏற்பட கூடும் என அஞ்சிய, கூட்டுறவு சங்கத்தினா் விற்பனையை நிறுத்தி வைத்துள்ளனா்.

இது குறித்து தகவலறிந்த கிராம மக்கள், தேவைக்கேற்ப உரமூட்டைகளை அரசு மானிய விலையில் வழங்க வலியுறுத்தி அச் சங்கத்தை முற்றுகையிட்டு, அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த பேரையூா் போலீஸாா், வருவாய் ஆய்வாளா் வேலாயுதமூா்த்தி, முன்னாள் எம்.பி., நிறைகுளத்தான் உள்ளிட்டோா் சம்பவ இடத்துக்கு வந்து கிராம மக்களிடம் பேச்சு வாா்த்தை நடத்தினா்.

இது குறித்து, கூட்டுறவு சங்கத் தலைவா் குருவையா கூறியது: பருவத்தின்போது மட்டுமே உர மூட்டைகள் விநியோகம் செய்ய முடியும். குறித்த காலத்திற்குள் உர மூட்டைகளை விநியோகிக்காமல் காலம் தாழ்த்தி அவற்றை வழங்கினால், விவசாயிகளுக்கு பயனளிக்காது. எனவே, இம்மாத 11 ஆம் தேதிக்குள், இச் சங்கத்தால் பயன்பெறும் அனைத்து விவசாயிகளுக்கும் உர மூட்டைகளை வழங்காவிடில், கூட்டுறவு சங்க அலுவலகத்தை பூட்டு போடும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com