சதுர்த்தி பெருவிழா: உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயிலில் திருக்கல்யாணம்
By DIN | Published On : 01st September 2019 01:57 AM | Last Updated : 01st September 2019 01:57 AM | அ+அ அ- |

திருவாடானை அருகே உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயிலில் சதுர்த்தி பெருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாணம் சனிக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் சதுர்த்தி பெருவிழா ஆண்டுதோறும் ஆவணி மாதம் நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டும் கடந்த 24 ஆம் தேதி (சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. 10 நாள்கள் நடைபெறும் விழாவில் ஒவ்வொரு நாளும் வெள்ளி புஷ்ப வாகனம், கேடகம், பல்லக்கு, மயில், யானை, ரிஷபம், காமதேனு, குதிரை, சிம்மம் உள்ளிட்ட வாகனங்களில் விநாயகர் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம், சித்தி புத்தி தேவியருடன் மாலை மாற்றுதல் வைபவம் சனிக்கிழமை மாலை நடைபெற்றது. அதனை தொடர்ந்து சிறப்பு பூஜைகளும் அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றன. ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம் நடைபெறுகிறது. 10 ஆம் நாள் திங்கள்கிழமை தீர்த்தவாரியுடன் விழா நிறைவடைகிறது. இதில் சுற்று வட்டாரத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை தரிசனம் செய்தனர்.
விழா ஏற்பாடுகளை நிர்வாக அலுவலர் பழனிவேல் பாண்டியன், சரக பொறுப்பாளர் புவனேஷ் குமார் மற்றும் கிராமத்தினர் செய்துள்ளனர்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G