படகு மூழ்கி நான்கு மீனவர்கள் இறப்பு: அக்னி தீர்த்தக் கடலில் மலர் தூவி அஞ்சலி
By DIN | Published On : 11th September 2019 07:59 AM | Last Updated : 11th September 2019 07:59 AM | அ+அ அ- |

நடுக்கடலில் படகு மூழ்கி உயிரிழந்த ராமேசுவரம் மீனவர்கள் 4 பேரின் ஆன்மா சாந்தியடைய வேண்டி இந்து மக்கள் கட்சியினர் செவ்வாய்க்கிழமை அக்னி தீர்த்தக் கடலில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
ராமேசுவரம் நடராஜபுரம் மீனவர் கிராமத்தை சேர்ந்த 10 மீனவர்கள் கடலூரில் வாங்கிய நாட்டுப் படகில் கடந்த 3 ஆம் தேதி இரவு ராமேசுவரத்துக்கு வந்துகொண்டிருந்தபோது படகு கடலில் மூழ்கியது. இதில் 6 மீனவர்கள் மீட்கப்பட்டனர். இலங்கேஸ்வரன், உமாகாந்த், காந்தகுமார், மதன் ஆகிய 4 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், படகு மூழ்கி உயிரிழந்த 4 மீனவர்களின் ஆன்மா சாந்தியடைய வேண்டி, இந்து மக்கள் கட்சியினர், ராமேசுவரம் அக்னி தீர்த்தக்கடலில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் அக்கட்சியின் மாவட்டத் தலைவர் பிரபாகரன் தலைமை வகித்தார். ஒன்றியத் தலைவர் தளபதி, தொழில் சங்கத் தலைவர் பாண்டியராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர் தலைவர் நம்புகார்த்திக் மற்றும் மகேந்திரன், நம்புராஜ்குமார், மாரிமுத்து, சுரேஷ், ராமச்சந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்திற்கு தலா 20 லட்சம் வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்க வேண்டும். மீன் பிடிக்க செல்லும் அனைவருக்கும் பாதுகாப்பு உபகரணங்களை தமிழக அரசு வழங்க வேண்டும் என அப்போது கோரிக்கை விடுத்தனர்.