பரமக்குடியில் இன்று இமானுவேல் சேகரன் நினைவு தினம்: 5 ஆயிரம் போலீஸார் குவிப்பு

பரமக்குடியில் புதன்கிழமை இமானுவேல் சேகரனின் 62-வது நினைவு தினம் அனுசரிக்கப்பட உள்ளதை
Updated on
1 min read

பரமக்குடியில் புதன்கிழமை இமானுவேல் சேகரனின் 62-வது நினைவு தினம் அனுசரிக்கப்பட உள்ளதை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் 5 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் ஆளில்லா உளவு விமானம் மூலம் கண்காணிக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
 பரமக்குடி அரசு போக்குவரத்து பணிமனை பகுதியில்  இமானுவேல் சேகரன் நினைவிடம் அமைந்துள்ளது. அவரது நினைவு தினத்தை முன்னிட்டு  அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் சமுதாய அமைப்பினர் ஏராளமானோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 
 அஞ்சலி செலுத்த வருவோருக்கு உரிய பாதுகாப்பு அளிக்கும் வகையிலும், சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது உரிய நடவடிக்கை எடுத்திடவும் மாவட்டம் முழுவதும் 5 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
 இதுகுறித்து கூடுதல் டி.ஜி.பி.  கே.ஜெயந்த் முரளி கூறியது:  இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி அஞ்சலி செலுத்த வரும் வழித்தடங்களிலும், பதற்றம் நிறைந்த பகுதிகளிலும் ஏராளமான கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு நகர் காவல் நிலைய கட்டுப்பாட்டு அறையிலிருந்து கண்காணிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோரை கண்காணித்து நடவடிக்கை எடுக்க ஆளில்லா உளவு விமானம் பயன்படுத்தப்பட உள்ளது. 500 மீட்டர் உயரத்தில் பறகும் இந்த ஆளில்லா விமானம் மூலம், 3 கி.மீ. சுற்றளவில் நடக்கும் சம்பவங்களை கண்டறிய முடியும்.  
 அஞ்சலி செலுத்த வருவோருக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும். இதற்காக ஐ.ஜி. கே.பி.சண்முகராஜேஸ்வரன் தலைமையில் 5 காவல் சரக துணைத் தலைவர்கள், 18 காவல் கண்காணிப்பாளர்கள், 44 துணைக் கண்காணிப்பாளர்கள் என மொத்தம் 5 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அஞ்சலி செலுத்த வரும் வழித்தடங்களில் 18 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
  வாடகை வாகனங்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பதற்றமான இடங்களில் கூடுதல் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றார்.
 மேலும் நகரில் பல்வேறு இடங்களில் தீயணைப்பு வாகனங்கள், 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள், கலவரத்தடுப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். அஞ்சலி செலுத்த வருவோரின் வாகனங்கள் நிறுத்துவதற்கு தனி இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com