ராமநாதபுரம் மாவட்டத்துக்கு சரக்கு, சுற்றுலா வாடகை வாகனங்கள் வரத் தடையில்லை: ஆட்சியர் தகவல்

ராமநாதபுரம் மாவட்டத்தில் 144  தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், சரக்கு வாகனம்
Updated on
1 min read

ராமநாதபுரம் மாவட்டத்தில் 144  தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், சரக்கு வாகனம் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வரும் வாடகை வாகனங்களுக்கு தடையில்லை என மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் கூறினார்.
 ராமநாதபுரம் அருகேயுள்ள அமிருதா வித்யாலயாவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவேகானந்தரின் சிகாகோ நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ராமநாதபுரம் மாவட்டத்தில் செப்டம்பர் 9 ஆம் தேதி முதல் அக்டோபர் 31 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
 பரமக்குடியில் புதன்கிழமை (செப்.11) நடைபெறும் இமானுவேல் சேகரன் நினைவு தினம் மற்றும் அக்டோபரில் நடைபெறும் தேவர் ஜயந்தியை முன்னிட்டு இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் நினைவு தினம், ஜயந்தி நிகழ்ச்சிகளுக்கு வாடகை வாகனங்களில் வரக்கூடாது. சொந்த வாகனங்கள் வைத்திருப்போர் முன் அனுமதி பெற்றே அறிவிக்கப்பட்ட வழியில் மட்டுமே வரவேண்டும். 
 பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு தினத்துக்கு வருவோருக்கு தேவையான குடிநீர் வசதி உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன. தேவையான பாதுகாப்பும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. செயல் மாஜிஸ்திரேட் மற்றும் கோட்டாட்சியர் ஆகியோர் பரமக்குடியில் இருந்து கண்காணிப்பர். ராமநாதபுரம் மாவட்டத்துக்குள் வந்து செல்லும் வெளியூர் பயணிகள் உள்ளிட்ட அனைத்துப் பொதுமக்களுக்கும் இடையூறு இல்லாத வகையில் நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 
  ராமநாதபுரம் மாவட்டத்துக்குள் வழக்கமாக வரும் சரக்கு லாரிகள், சுற்றுலாப் பயணிகளின் வாடகை வாகனங்கள் வந்து செல்லலாம். வாடகை வாகனங்களில் தலைவர்களின் நிகழ்ச்சிகளுக்கு வருவதற்கே தடை விதிக்கப்பட்டுள்ளது. எந்த வகை வாகனங்கள் என்றாலும் குறிப்பிட்ட நிகழ்ச்சிகளுக்கு வாடகைக்கு அமர்த்தி வரக்கூடாது என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. 
 பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்துவோர் அதுகுறித்து முன் அனுமதியைப் பெறவேண்டும். திடீரென நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது என்றார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com