அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் மோதல்: கிளை மேலாளர், நடத்துநர் மீது வழக்குப் பதிவு
By DIN | Published On : 29th September 2019 05:20 AM | Last Updated : 29th September 2019 05:20 AM | அ+அ அ- |

பரமக்குடி அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் நடத்துநருக்கும், மேலாளருக்கும் ஏற்பட்ட தகராறில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதுகுறித்து போலீஸார் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.
பரமக்குடி அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் கிளை மேலாளராக பணியாற்றி வருபவர் இருளப்பன் (57). அங்கு போக்குவரத்து அலுவலராக செந்தில் என்பவர் பணியாற்றி வருகிறார். அதே பணிமனையில் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த முனுசாமி மகன் ராஜா (36) என்பவர் நடத்துநராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு ராஜா பணி முடித்து வந்துள்ளார். அப்போது மேலாளரும், போக்குவரத்து அலுவலரும் அவருக்கு ஓய்வு வழங்காமல் மீண்டும் பணிக்கு செல்ல உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.
அப்போது ஏற்பட்ட வாய்த்தகராறில் மேலாளர் மேஜை மீது இருந்த இரும்பு ஸ்கேலால் நடத்துநர் ராஜாவின் தலையில் அடித்ததில் அவரது தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. உடனே நடத்துநர் ராஜா மேலாளர் இருளப்பன் மீது தாக்குதல் நடத்தியதில் அவருக்கும் காயம் ஏற்பட்டது. காயமடைந்த இருவரும் பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் நடத்துநர் ராஜா அளித்தப் புகாரின் பேரில் மேலாளர் இருளப்பன், போக்குவரத்து அலுவலர் செந்தில் ஆகிய இருவர் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். அதேபோல் மேலாளர் ஆ.இருளப்பன் அளித்தப் புகாரின் பேரில் நடத்துநர் ராஜா மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.