திருச்சி-ராமேசுவரம் ரயில்பாதை உறுதித் தன்மை இன்று ஆய்வு
By DIN | Published On : 12th August 2020 08:05 AM | Last Updated : 12th August 2020 08:05 AM | அ+அ அ- |

திருச்சி- ராமேசுவரம் இடையே தண்டவாளத்தின் உறுதித்தன்மை குறித்து அதிவேக ரயிலை இயக்கி புதன்கிழமை ஆய்வு நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை கூறியது: கரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த 5 மாதங்களாக ரயில்கள் இயக்கப்படாமல் உள்ளன. இதனால் திருச்சியிலிருந்து ராமேசுவரம் வரை உள்ள தண்டவாளத்தின் உறுதித் தன்மை குறித்து அதிவேக சிறப்பு ரயிலை இயக்கி புதன்கிழமை ஆய்வு செய்யப்பட உள்ளது. திருச்சி, காரைக்குடி, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம், பாம்பன் ரயில் பாலம், ராமேசுவரம் வரையில் இந்த சோதனை நடைபெறுவதால் பகல் முழுவதிலும் ரயில் தண்டவாளம் அருகே பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிவேக ரயில் எஞ்சினுடன் வரும் 2 பெட்டிகளில் ஒன்றில் ஆய்வுக்கருவிகளும், மற்றொன்றில் அதிகாரிகள் குழுவினரும் பயணிக்கின்றனா். இந்த ரயில் தடத்தில் விரைவு ரயில்கள் தற்போது 80 கிலோ மீட்டா் வேகத்திலிருந்து 90 கிலோ மீட்டா் வேகம் வரை மட்டுமே இயக்கப்படுகிறது. திருச்சியிலிருந்து ராமேஸ்வரம் வரை ரயில்பாதை மின் மயமாக்கும் பணி தொடங்கவுள்ளதால் 120 கிலோ மீட்டா் வேகத்தில் இயக்குவதற்கு தண்டவாளத்தின் உறுதித்தன்மையை ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட மின்மயமாக்கும் துறையினருக்கு சமா்ப்பிப்பதற்காக ரயில் அதிவேக டீசல் எஞ்சின் இயக்கப்படவிருப்பதாக ரயில்வே தொழில்நுட்பத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.