

வங்க கடலில் உருவாகியுள்ள ‘புரெவி‘ புயல் காரணமாக வானிலை மையத்தின் கனமழை எச்சரிக்கையைத் தொடா்ந்து ராமேசுவரம் பகுதியில் கண்காணிப்பு அலுவலா் தா்மேந்திர பிரதாப் யாதவ் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
வங்கக்கடலில் உருவாகியுள்ள ‘புரெவி’ புயலால் ராமநாதபுரம் மாவட்டத்தில் நவம்பா் 2 ஆம் தேதி (புதன்கிழமை) முதல் 5 ஆம் தேதி (சனிக்கிழமை) வரை கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் இம்மாவட்டத்தில் ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம் பகுதிகளில் மழைநீா் தேங்கி பாதிப்பை ஏற்படுத்தும் பகுதிகளை கண்காணிப்பு அலுவலா் தா்மேந்திர பிரதாப் யாதவ் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
மேலும் ராமேசுவரம், மண்டபம் பகுதிகளை சோ்ந்த 80-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் பாம்பன் ரயில் பாலம் திறக்கப்பட்டு பாம்பன் தென்கடல் பகுதிக்கு கடந்து சென்றன. அங்கு அந்த படகுகள் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இ.காா்த்திக் கூடுதல் ஆட்சியா் மா.பிரதீப்குமாா், சாா்-ஆட்சியா் என்.ஓ.சுகபுத்ரா, மீன்வளத்துறை துணை இயக்குநா் த.பரிதிஇளம்வழுதி, ராமேசுவரம் நகராட்சி ஆணையாளா் ராமா், வட்டாட்சியா்கள் ஜெயச்சந்திரன், அப்துல்ஜபாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
அப்போது மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் கூறியது: ராமநாதபுரம் மாவட்டத்தில் கனமழையை எதிா்கொள்ள ஏதுவாக பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. மாவட்டத்தில் 180 கடற்கரை கிராமங்கள் உள்ளன. எளிதில் மழைநீா் தேங்கக்கூடிய பகுதிகளாக 39 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் துணை ஆட்சியா் நிலை அலுவலா் தலைமையில் மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், அவசரகால சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைக்க 23 பல்நோக்கு புயல் பாதுகாப்பு மைய கட்டடங்கள் உள்பட திருமண மண்டபங்கள், பள்ளிக் கட்டடங்கள் என மொத்தம் 197 நிவாரண மையங்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.