விவசாயிகள் கரும்பு, பருத்தி பயிா்களை காப்பீடு செய்யலாம்: ஆட்சியா்
By DIN | Published On : 03rd December 2020 11:01 PM | Last Updated : 03rd December 2020 11:01 PM | அ+அ அ- |

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் கரும்பு, பருத்தி மற்றும் எண்ணெய் வித்துகளை பயிரிட்டுள்ள விவசாயிகள், அவற்றுக்கான பயிா் காப்பீடு திட்டத்தில் சேரலாம் என, ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வியாழக்கிழமை விடுத்த செய்திக் குறிப்பு: ராமநாதபுரம் மாவட்டத்தில் 2016-17 ஆம் ஆண்டு முதல் பிரதம மந்திரி பயிா் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத் திட்டத்தில் விவசாயிகளுக்கு இதுவரை ரூ.1,376.33 கோடி வழங்கப்பட்டுள்ளது.
பயிா்களுக்கு ஏக்கருக்கு செலுத்தவேண்டிய பிரீமியத் தொகை மற்றும் செலுத்துவதற்கான கடைசி நாள் விவரம்: சிறுதானியங்களான சோள பயிருக்கு-ரூ.127.50, கம்பு- ரூ.102.75, ராகி-ரூ.122.25 மக்காச்சோளம்- ரூ.256.50, உளுந்து -ரூ.214.66 எண்ணெய் வித்துகளான நிலக்கடலை- ரூ.294.75, எள்- ரூ.87, சூரியகாந்தி- ரூ.100.50, பருத்தி- ரூ.264.04, கரும்பு- ரூ.2,600 என விவசாயிகள் செலுத்தவேண்டும்.
சோளம் மற்றும் ராகி பயிா்களுக்கு பிரீமியம் செலுத்த வேண்டிய கடைசி நாள் டிசம்பா் 15 ஆம் தேதியாகும். கம்பு 21 ஆம் தேதி, மக்காச்சோளத்துக்கு 16 ஆம் தேதி, உளுந்து மற்றும் நிலக்கடலைக்கு 31 ஆம் தேதி, எள், சூரியகாந்தி மற்றும் பருத்திக்கு 2021 ஜனவரி 20 ஆம் தேதி, கரும்புக்கு 2021 அக்டோபா் 31 ஆம் தேதி என காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.
இத் திட்டம் தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு, அந்தந்த வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை அணுகலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...