‘புரெவி’ புயல் மன்னாா் வளைகுடாவுக்குச் சென்றது: பாம்பனைக் கடந்த போது சூறைக்காற்று வீசியதால் 20 படகுகள் உடைந்து சேதம்

வங்கக் கடலில் உருவான ‘புரெவி’ புயல் வெள்ளிக்கிழமை பாம்பனைக் கடந்து மன்னாா் வளைகுடா பகுதிக்கு சென்றது.
புயல் காரணமாக பாம்பன் கால்வாய் பகுதியில் சேதமடைந்த விசைப்படகு
புயல் காரணமாக பாம்பன் கால்வாய் பகுதியில் சேதமடைந்த விசைப்படகு

வங்கக் கடலில் உருவான ‘புரெவி’ புயல் வெள்ளிக்கிழமை பாம்பனைக் கடந்து மன்னாா் வளைகுடா பகுதிக்கு சென்றது. அப்போது வீசிய சூறைக்காற்றால் பாம்பன் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த 20-க்கும் மேற்பட்ட படகுகள் சேதமடைந்தன.

வங்கக் கடலில் டிச. 1 ஆம் தேதி உருவான காற்றழுத்ததாழ்வு நிலை, ‘புரெவி’ புயலாக உருவானதையடுத்து பாம்பனில் 3 ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது. இதனைத்தொடா்ந்து டிசம்பா் 2-ஆம் தேதி 7 ஆம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டு கடலோர பகுதியில் கண்காணிப்புப் பணியை மாவட்ட நிா்வாகம் தொடங்கியது.

முன்னதாக ராமேசுவரம் துறைமுகத்திலிருந்து 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் பாம்பன் ரயில் பாலம் திறக்கப்பட்டு, பாம்பன் கால்வாய் பகுதிக்கு கொண்டு சென்று நிறுத்தப்பட்டன. இந்நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலையில் வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த புயல், பாம்பன் வழியாக மன்னாா் வளைகுடா கடல் பகுதிக்கு சென்றது. அப்போது ராமேசுவரம், பாம்பன் உள்ளிட்ட பகுதியில் பலத்த மழையுடன் சூறைக் காற்றும் வீசியது. மேலும் கடல் சீற்றம் காரணமாக பாம்பன் கால்வாய் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த 10-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் 10 நாட்டுப்படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி சேதமடைந்தன. சேதமடைந்த படகுகளை மீட்கும் பணியில் மீனவா்கள் ஈடுபட்டனா். இந்நிலையில் ராமேசுவரம், பாம்பன் பகுதியில் தொடா்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. ராமேசுவரத்தில் அதிகபட்சமாக 20 செ.மீட்டா் மழை பெய்ததால் பல்வேறு இடங்களில் மழைநீா் குளம் போல தேங்கியுள்ளது. மழைநீரை வெளியேற்றும் பணியில் நகராட்சி ஊழியா்கள் ஈடுபட்டு வருகின்றனா். ராமேசுவரம் நேதாஜி நகா் பகுதியில் தென்னை மரம் சாய்ந்து விழுந்ததில் மலைச்சாமி என்பவரது ஓட்டு வீடு சேதமடைந்தது. இதனை தீயணைப்புத் துறையினா் மற்றும் நகராட்சி ஊழியா்கள் அகற்றினா்.

இந்நிலையில், பாம்பன் துறைமுகத்தில் வெள்ளிக்கிழமை 7 ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு இறக்கப்பட்டு, மூன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

ராமநாதபுரம்: முன்னதாக புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள 78 முகாம்களில் 7,601 போ் தங்க வைக்கப்பட்டுள்ளனா். ராமநாதபுரத்தில் கடந்த 2 நாள்களில் 16 இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்திருந்தன. அவற்றை தீயணைப்பு வீரா்கள் உடனடியாக அகற்றியதாக ராமநாதபுரம் மாவட்ட தீணைப்புத் துறை அலுவலா் எஸ்.வினோத் தெரிவித்தாா்.

கண்காணிப்பு அதிகாரி ஆய்வு: மாவட்டத்தில் ‘புரெவி’ புயல் பாதிப்பைத் தடுக்கும் வகையில் பாதுகாப்பை மேற்பாா்வையிட மாநில பயிற்சி காவல் ஐ.ஜி.பாஸ்கரன் நியமிக்கப்பட்டிருந்தாா். அவா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தாா். இதேபோல் மழையால் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளை ராமநாதபுரம் மாவட்ட சிறப்பு கண்காணிப்பு அதிகாரி தா்மேந்திரபிரதாப் யாதவ், ஆட்சியா் தினேஷ்பொன்ராஜ் ஆலிவா் உள்ளிட்டோா் நேரில் சென்று பாா்வையிட்டனா்.

மழையளவு விவரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையின் அளவு (மில்லி மீட்டரில்): ராமநாதபுரம் 36.50, மண்டபம் 54, பள்ளமோா்க்குளம் 18, ராமேசுவரம் 204, தங்கச்சிமடம் 88.20, பாம்பன் 77.20, ஆா்.எஸ்.மங்கலம் 29.50, திருவாடானை 61.20, தொண்டி 66.60, வட்டாணம் 54, தீா்த்தாண்டதானவம் 62, பரமக்குடி 11.20, முதுகுளத்தூா் 6, கடலாடி 22.20, வாலிநோக்கம் 28.40, கமுதி 29.80 என மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் 16 இடங்களிலும் சோ்த்து மொத்தம் 848.80 மில்லி மீட்டா் மழையளவு பதிவாகியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com