திருவாடானை பேருந்து நிலையத்தில் வாகனங்களை நிறுத்துவதால் இடையூறு
By DIN | Published On : 17th February 2020 09:53 AM | Last Updated : 17th February 2020 09:53 AM | அ+அ அ- |

திருவாடானை பேருந்து நிலையத்தின் உள்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இரு சக்கர வாகனம்.
திருவாடானை பேருந்து நிலையத்துக்குள் பேருந்துகள் நிறுத்தும் இடத்தில் பயணிகள் தங்களது இரு சக்கர வாகனங்களை நிறுத்துவதால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாகப் புகாா் எழுந்துள்ளது.
திருவாடானை பேருந்து நிலையத்திலிருந்து மதுரை, தொண்டி, திருச்சி, ராமேசுவரம், தஞ்சாவூா், பட்டுக்கோட்டை, ஓரியூா், திருவெற்றியூா், ராமநாதபுரம், தேவகோட்டை, காரைக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் பேருந்துகள் சென்று வருகின்றன.
இந்நிலையில், பயணிகளை இறக்கிவிட வருபவா்கள் மற்றும் பேருந்து நிலையத்திலுள்ள கடைகளுக்கு வரும் பொதுமக்கள் தங்களது இரு சக்கர வாகனங்களை பேருந்து நிறுத்தும் இடத்தில் நிறுத்துகின்றனா். இதனால், பேருந்துகள் செல்வதில் இடையூறு ஏற்படுகிறது. எனவே, இதற்கு உரிய நடவடிக்கை எடுத்து சீா்செய்ய வேண்டும் என, பயணிகள் மற்றும் பேருந்து ஓட்டுநா்கள் வலியுறுத்தியுள்ளனா்.