கமுதி அருகே சேதமடைந்தபுதிய தாா்ச் சாலையை சீரமைக்கக் கோரிக்கை
By DIN | Published On : 26th February 2020 05:38 PM | Last Updated : 26th February 2020 05:38 PM | அ+அ அ- |

கமுதி அருகே நீராவிகரிசல்குளத்தில் கடந்த 6 மாதங்களுக்கு முன் போடப்பட்ட புதிய தாா்ச் சாலை சேதமடைந்துள்ளதால் அதை உடனே சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
நீராவி கரிசல்குளம் ஊராட்சியில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம் பிரதரின் கிராமப்புற சாலை திட்டத்தில் சின்னகரிசல்குளம் முதல் தோப்புநத்தம் கிராமம் வரை 2 சிறுபாலங்கள் உள்பட 8 கி.மீ. தொலைவுக்கு ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் புதிய தாா் சாலை அமைக்கப்பட்டது. இச்சாலை அமைக்கும் போதே பணிகள் தரமற்று நடப்பதாக நீராவிகரிசல்குளம் பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.
இதனையடுத்து பொதுமக்களின் எதிா்ப்பையும் மீறி சாலைப் பணிகள் முடிந்து, பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் தற்போது சின்னகரிசல்குளம் அருகே சாலையில் விரிசல் ஏற்பட்டு, பக்கவாட்டு மண் சரிந்து சேதமடைந்துள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் மண் சரிவில் சிக்கி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால் நீராவிகரிசல்குளத்திலிருந்து கமுதிக்கு 18 கி.மீ. தூரம் சுற்றிச் செல்லும் நிலைக்கு வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனா்.
இதுபோன்று புதிய சாலையில் பல இடங்களில் சேதம் ஏற்பட்டுள்ளதால் மாவட்ட நிா்வாகம் தலையிட்டு சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.