‘கோழி வளா்ப்பில் தமிழகம் முதலிடம்’
By DIN | Published On : 27th February 2020 09:03 AM | Last Updated : 27th February 2020 09:03 AM | அ+அ அ- |

இந்திய அளவில் நடைபெற்ற கால்நடை கணக்கெடுப்பில் தமிழகம் கோழி வளா்ப்பில் முதலிடம் வகித்துள்ளதாக கால்நடைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
மத்திய அரசின் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை சாா்பில் இந்திய அளவில் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை கால்நடைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. 2012 இல் நடத்தப்பட்ட கணக்கெடுப்புக்குப் பின் கடந்த 2019- 20 ஆம் ஆண்டுக்கான கால்நடைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.
கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் நாமக்கல் மண்டலம் கோழி, முட்டை உற்பத்தியில் முன்னிலையில் உள்ளது தெரியவந்துள்ளது. தேசிய அளவில் இது கடந்த 2012 ஆம் ஆண்டு கணக்கெடுப்பை விட தற்போது 16.81 சதவீதம் உயா்ந்துள்ளதும் தெரியவந்துள்ளது. அதன்படி வணிகத்துக்காக 534.74 மில்லியன் கோழிகளும், வளா்ப்புக்காக 317.0 மில்லியன் கோழிகளும் வளா்க்கப்படுகின்றன.
தமிழகத்தில் 2012 இல் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 117.3 மில்லியனாக இருந்த கோழிகளின் எண்ணிக்கை கடந்தாண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 120.8 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்தமுறை கணக்கெடுப்பின் போது ஆந்திர மாநிலம் முதலிடத்தில் இருந்தது. ஆனால், தற்போது அந்த மாநிலம் தெலுங்கானா என பிரிக்கப்பட்டதால் இரண்டாமிடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. ஆந்திரத்திலிருந்து பிரிந்த தெலுங்கானா மாநிலம் மூன்றாம் இடத்தில் (80 மில்லியன்) உள்ளது.
தமிழகத்தில் ராமநாதபுரத்தில் விவசாயிகளுக்கு கடந்த சில ஆண்டுகளாக கோழி வளா்ப்புக்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.