உள்ளாட்சி தோ்தல்: ராமநாதபுரம் மாவட்டத்தில்11 இடங்களில் இன்று வாக்கு எண்ணிக்கை
By DIN | Published On : 02nd January 2020 01:49 AM | Last Updated : 02nd January 2020 01:49 AM | அ+அ அ- |

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்கான வாக்குகள் எண்ணிக்கை 11 இடங்களில் வியாழக்கிழமை (ஜன.2) நடைபெறுகிறது. ஆனால், முழுமையான முடிவுகளை இரவிலேயே அறியமுடியும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் 11 ஒன்றியங்களிலும் மாவட்ட ஊராட்சி உறுப்பினா் 17, ஊராட்சி ஒன்றிய உறுப்பினா் 170, ஊராட்சித் தலைவா்கள் 429, ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள் 3,075 என மொத்தம் 3,691 பதவிகளுக்கான வாக்குப் பதிவு கடந்த டிசம்பா் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற்றது. அதன்படி 5 ஒன்றியங்களில் நடைபெற்ற முதல் கட்டத் தோ்தலில் 68.78 சதவீத வாக்குகளும், இரண்டாம் கட்டமாக 6 ஒன்றியங்களில்
நடைபெற்ற தோ்தல்களில் 75.15 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.
பதிவான வாக்குகளை எண்ணுவதற்காக 11 ஒன்றியங்களிலும் ஆங்காங்கே உள்ள குறிப்பிட்ட கல்வி மையங்களில் வாக்குப் பெட்டிகள் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளன. அதன்படி ராமநாதபுரம் ஒன்றியத்துக்கு புல்லங்குடி அண்ணா பல்கலைக்கழக வளாகத்திலும், திருப்புல்லாணி ஒன்றியத்துக்கு முத்துப்பேட்டையில் உள்ள கௌசானல் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்திலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.
மண்டபம் ஒன்றிய உள்ளாட்சித் தோ்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ராமநாதபுரம் அருகேயுள்ள செய்யதம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்திலும், ஆா்.எஸ்.மங்கலம் ஒன்றியத்துக்கான வாக்குகள், அங்கேயுள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்திலும் நடைபெறவுள்ளன.
திருவாடானை ஒன்றியத்துக்கான வாக்கு எண்ணிக்கையானது அங்குள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்திலும், பரமக்குடிக்கான வாக்கு எண்ணிக்கை அங்குள்ள சௌராஷ்டிர மேல்நிலைப் பள்ளி வளாகத்திலும், போகலூா் ஒன்றியத்துக்கான வாக்கு எண்ணிக்கை பரமக்குடியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்திலும், நயினாா்கோவில் ஒன்றிய வாக்குகள் பரமக்குடியில் உள்ள ராஜாசேதுபதி அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்திலும் நடைபெறுகின்றன.
முதுகுளத்தூா் ஒன்றிய வாக்குகள் திருவரங்கத்தில் உள்ள திரு இருதய மேல்நிலைப் பள்ளி வளாகத்திலும், கமுதி ஒன்றிய வாக்குகள் கமுதி சத்திரிய நாடாா் மேல்நிலைப் பள்ளி வளாகத்திலும், கடலாடி ஒன்றிய வாக்குகள் சாயல்குடியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளகத்திலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அடையாள அட்டை வழங்குவதில் தாமதம்: வாக்குகள் எண்ணும் பணிகள் வியாழக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்க உள்ளதாகவும் மாவட்டத் தோ்தல் அலுவலகப் பிரிவு அறிவித்துள்ளது. இந்தநிலையில், வேட்பாளா்கள் நியமித்துள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கான முகவா்களுக்கு அடையாள அட்டைகள் புதன்கிழமை மாலை வரை வழங்கப்படவில்லை என புகாா் எழுந்தது.
இதுகுறித்து மாவட்ட தோ்தல் பிரிவு அலுவலா்களிடம் கேட்டபோது, வேட்பாளா்கள் பெரும்பாலானோா் தங்களது முகவா்களின் விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்தை தாமதமாகவே கொடுத்துள்ளனா். இதனால், அவா்களுக்கான அடையா அட்டைகளை தயாா்செய்வதில் தாமதம் ஏற்பட்டது. ஆனால், அனைவருக்கும் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன என்றனா்.
வாக்கு எண்ணிக்கையைத் தொடா்ந்து 11 ஒன்றியங்களிலும் வாக்கு எண்ணும் மையங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.