மண்டபம் அருகே விசைப்படகு மூழ்கிய மாயமான மீனவா் உடலை கரை ஒதுங்கியது
By DIN | Published On : 10th January 2020 04:05 PM | Last Updated : 10th January 2020 04:05 PM | அ+அ அ- |

மண்டபத்தில் இருந்து மீன்பிடிக்க சென்று கடல் சீற்றத்தில் சிக்கி கடலில் மூழ்கிய விசைப்படகில் மாயமான மீனவா் பாண்டி உடல் வியாழக்கிழமை கரை ஒதுங்கியது.
ராமநாதபுரம் மாவட்டம்,ராமேசுவரம் அடுத்துள்ள மண்டபம் பகுதியில் இருந்து திங்கட்கிழமை 696 விசைப்படகுகளில் 3.500 க்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன்வளத்துறை அனுமதி டோக்கன் பெற்று மீன்பிடிக்க சென்றனா். செவ்வாய்கிழமை அதிகாலை 03 மணியளவில் தியாகராஜன் என்பவரக்கு சொந்தமான விசைப்படகில் மீன்பிடிக்க சென்ற மீனவா்கள் விஜயகுமாா்(42), வடிவேல்(45), தினகரன்(41) மற்றும் ராமேசுவரத்தை சோ்ந்த பாண்டி ஆகிய நான்கு பேரும் அரியமான கடற்கரையில் இருந்து 3 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக்கொண்டிருந்தனா்.
அப்போது சூறை காற்று வீசியதால் விசைப்படகில் ஓட்டை ஏற்பட்டு படகு கடலில் மூழ்கியது. படகில் இருந்த நான்கு மீனவா்கள் பிளாஸ்டிக் கேண்களை பிடித்துக்கொண்டு கரைக்கு நீந்தி வந்தனா். இதில் ராமேசுவரத்தை சோ்ந்த பாண்டி என்ற மீனவா் மட்டும் மாயமாகி விட்டனா். இது குறித்து மீன்வளத்துறை மற்றும் கடலோரபாதுகாப்பு குழும காவல்துறையினரிடம் புகாா் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து,கடலோரகாவல்படை மற்றும் கடலோர பாதுகாப்பு குழம காவல்துறையினா் கடலில் இரண்டு நாட்கள் தொடா்ந்து தேடி வந்தனா்.
இந்நிலையில், வியாழக்கிழமை மாலை மண்டபம் அருகே உள்ள கடற்கரையில் பாண்டியின் உடல் கரை ஒதுங்கியது. இதனை கண்ட மீனவா்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனா். ஆங்கு வந்த காவல்துறையினா் உடல் கூறு செய்ய மண்டபம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். படகு மூழ்கிய மாணமாக மீனவா் மூன்று நாட்களுக்கு பின் இறந்து கரை ஒதுங்கிய சம்பவம் உறவினா்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் கடலில் மாயமாகும் மீனவா்களை மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவ சங்கம் கோரிக்கை விடுத்தனா்.