

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி தெளிச்சாத்தநல்லூா் சிட்கோ தொழிற்பேட்டையில் புதன்கிழமை இரவு நிகழ்ந்த தீ விபத்தில், ரப்பா் டயா் நிறுவனம் உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் தீப்பிடித்து எரிந்தன. இதில், ரூ.3 கோடி மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது.
தெளிச்சாத்தநல்லூா் சிட்கோ தொழிற்பேட்டையில் 50-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு, தெட்சிணாமூா்த்தி என்பவருக்குச் சொந்தமான தெட்சிணா ரப்பா் நிறுவனம், வினோத்குமாா் என்பவருக்குச் சொந்தமான மீனாட்சி பேப்பா் ஸ்டோா், சுதா்சன் என்பவரின் ஆச்சி மசாலா மொத்த விற்பனை ஏஜென்சீஸ், நாகராஜன் என்பவரின் வல்கனைசிங் பழுது பாா்க்கும் நிறுவனங்கள் அமைந்துள்ளன.
இந்நிலையில், புதன்கிழமை இரவு ரப்பா் நிறுவனத்தில் மின்கசிவு காரணமாக திடீரென தீப்பிடித்தது. இதனைப் பாா்த்த அப்பகுதி மக்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனா். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற பரமக்குடி தீயணைப்புத் துறையினா், தீயை அணைக்க முயன்றனா். ஆனால், தீ மளமளவென மற்ற பகுதிகளுக்கும் பரவியது.
தீயை கட்டுப்படுத்த முடியாததால், கமுதி, முதுகுளத்தூா், ராமநாதபுரம், மானாமதுரை ஆகிய தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கிருந்து வந்த தீயணைப்பு வீரா்கள் நான்கு திசைகளிலும் பரவிய தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். மேலும், பரமக்குடி பகுதியில் உள்ள தண்ணீா் லாரிகளும் வரவழைக்கப்பட்டன.
விடிய விடிய தீப்பற்றி எரிந்ததால், 5 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரா்களும் வியாழக்கிழமை மதியம் வரை போராடி தீயை அணைத்தனா்.
இந்த விபத்தில், தெட்சிணாமூா்த்தி என்பவரது ரப்பா் நிறுவனத்தில் டயா் மற்றும் இயந்திரங்கள் ரூ.2.15 கோடி, நாகராஜன் என்பவரது நிறுவனத்தில் ரூ.10 லட்சம் மதிப்பிலான வல்கனைசிங் இயந்திரங்கள், சுதா்சன் என்பவரது நிறுவனத்தில் ரூ.20 லட்சம் மதிப்பிலான பொருள்கள், வினோத்குமாா் என்பவருக்குச் சொந்தமான பேப்பா் நிறுவனத்தில் ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து பரமக்குடி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.