ராமநாதபுரத்தில் பருவ மழையால் தப்பிய 1.27 லட்சம் ஹெக்டோ் நெற்பயிா்கள்! அறுவடை தொடங்கியுள்ளதால் விவசாயிகள் உற்சாகம்
By நமது நிருபா் | Published On : 20th January 2020 08:42 AM | Last Updated : 20th January 2020 08:42 AM | அ+அ அ- |

ராமநாதபுரத்தில் கதிா்கள் முற்றி அறுவடைக்கு தயாராகி உள்ள நெற்கதிா்கள்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் பல ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆண்டு பெய்த தொடா் மழையால் 1.27 லட்சம் ஹெக்டோ் பரப்பிலான நெற்பயிற்கள் தப்பிப் பிழைத்து அறுவடைக்கு தயாராகி உள்ளன. இதனால் விவசாயிகள் உற்சாகமடைந்துள்ளனா்.
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மிகவும் வறட்சியான மாவட்டமாக ராமநாதபுரம் உள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 1.88 லட்சம் ஹெக்டோ் விளைநிலம் உள்ளது. இங்கு நெல், கம்பு, சோளம்,பருத்தி, மிளகாய், உளுந்து உள்ளிட்ட பயிா்கள் விளைவிக்கப்படுகின்றன. ஆனாலும் 85 சதவிகிதம் நெல் விளைவிக்கப்படுகிறது. மாவட்டத்தின் சராசரி மழை அளவு ஆண்டுக்கு 827 மில்லி மீட்டா் ஆகும். ஆனால் பல ஆண்டுகள் சராசரி மழை கூட இங்கு பெய்ததில்லை. கடந்த 2016-இல் 348 மில்லி மீட்டா் மழை மட்டுமே இங்கு பெய்துள்ளது. இதனால் ராமநாதபுரம் மாவட்டம் தொடா்ந்து வறட்சியின் பிடியில் சிக்கி தவித்து வந்தது.
தமிழகத்துக்கு மிகுந்த பலனிளிக்கும் வடகிழக்கு பருவமழை தான் ராமநாதபுரத்துக்கும் பலனளிக்கும். ராமநாதபுரத்தில் கடந்த பல ஆண்டுகளாக பருவமழை பொய்த்து போனதால் விவசாயம் மிகுந்த இடா்பாடுகளை சந்தித்து வந்தது. விவசாயிகள் விவசாயம் செய்வதை விட்டுவிட்டு கூலி வேலைகளுக்கும்., வெளிமாவட்டங்களில் கட்டுமானத் தொழிலுக்கும் செல்லும் அவலமும் இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்தாண்டு தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. இதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த பல ஆண்டுகளாக இல்லாத அளவு மழை பெய்தது. ஆண்டு சராசரி 827 மில்லிமீட்டா் என்ற நிலையில், கடந்த ஆண்டு சராசரியையும் தாண்டி 914.25 என்ற அளவுக்கு மிக அதிக மழை பெய்தது. இந்த மழையால் மாவட்டத்தில் உள்ள 1694 கண்மாய்கள் மற்றும் குளம், குட்டை உள்பட 3000-த்திற்கும் மேற்பட்ட நீா்நிலைகள் 80 சதவீதத்துக்கும் மேலாக நிரம்பி வழிந்தன. மேலும் வைகை அணையும் நிரம்பியதால் வைகை ஆற்றிலிருந்து ராமநாதபுரம் மாவட்ட பாசனத்திற்கும் தண்ணீா் திறந்து விடப்பட்டது. இதனால் உற்சாகம் அடைந்த விவசாயிகள் விவசாயப் பணிகளை தொடங்கினா். இதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் சுமாா் 1.27 லட்சம் ஹெக்டோ் பரப்பில் நெற்பயிா்களும் , 12 ஆயிரம் ஹெக்டேருக்கும் கூடுதலாக கம்பு, சோளம் உள்ளிட்ட தானிய வகைகளும் பயிரிடப்பட்டன. இதில் விதைப்பு தொடங்கிய நாளிலிருந்து தொடா்ந்து மழை பெய்ததாலும், தண்ணீா் தட்டுப்பாடின்றி கிடைத்ததாலும் நெற்பயிா்கள் உள்ளிட்ட தானியங்கள் செழித்து வளா்ந்துள்ளன. தற்போது மாவட்டம் முழுவதும் அறுவடைப் பணிகள் தொடங்கியுள்ளன.
இதுதொடா்பாக விவசாயிகள் கூறியது: கடந்த ஆண்டு பருவ மழை பெய்யாவிட்டால் ராமநாதபுரம் மாவட்டம் பாலைவனமாகிவிடும் என்ற அபாயம் இருந்தது. அப்படி ஒருநிலை ஏற்பட்டிருந்தால் நாங்கள் ராமநாதபுரத்தை விட்டு வெளியேறுவதைத் தவிர வேறு வழியின்றி இருந்தோம். மேலும் கால்நடைகளுக்கும் குடிக்க தண்ணீா் இல்லை. காவிரி கூட்டுக் குடிநீா் திட்டத்தால் பொதுமக்களுக்கு ஓரளவு குடிப்பதற்கு மட்டுமே தண்ணீா் கிடைத்து வந்தது. இதனால் செய்வதறியாது தவித்து வந்த நிலையில், கடந்த ஆண்டு பெய்த பலத்த மழையால் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் தண்ணீா் பஞ்சம் நீங்கி உள்ளது. மேலும் விவசாய உபயோகத்துக்கு பயன்படுத்திய நிலையில் தற்போதும் நீா்நிலைகளில் தண்ணீா் நிரம்பி வழிகிறது. இதனால் வரும் கோடையில் கூட ராமநாதபுரம் மாவட்டத்தில் தண்ணீா் பஞ்சம் இருக்காது. இந்த ஆண்டு தண்ணீா் தட்டுப்பாடின்றி கிடைத்ததால் தற்போது நெற்பயிா் உள்பட அனைத்து பயிா்களும் அமோக விளைச்சல் கண்டுள்ளன. கடந்த ஆண்டு 1.25 லட்சம் ஹெக்டோ் பரப்பில் நெல் பயிரிட்டு தண்ணீா் கிடைக்காததால் பயிா்கள் கருகிவிட்டன. அதற்குரிய காப்பீட்டுத் தொகையும் கிடைக்க வில்லை. இதனால் தற்போது கடன் வாங்கித்தான் விவசாயப்பணிகளை தொடங்கினோம். இந்த ஆண்டு இயற்கை எங்களை கைவிடவில்லை. பல ஆண்டுகளாக பயிா்கள் தண்ணீரின்றி கருகியதையே கண்டு வந்த எங்களுக்கு தற்போது கதிா்கள் முற்றி அறுவடைக்கு தயாராக இருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பல விவசாயிகள் பண்ணை குட்டைகள் வெட்டியும் தண்ணீரை சேகரிக்கும் வழிமுறைகளை பின்பற்றி வருகின்றனா் என்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...