

குவாரியிலிருந்து மணல் அள்ளிவரும் லாரிகள் முறையான வழித்தடத்தில் செல்ல வலியுறுத்தி பரமக்குடி வட்டாட்சியா் அலுவலகத்தை கிராம மக்கள் சனிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இளையான்குடி அருகே குறிச்சி கிராமப் பகுதியில் சவடு மண் அள்ளும் உரிமம் பெற்ற குவாரியிலிருந்து டிப்பா் லாரிகள் மணல் அள்ளிக்கொண்டு கடந்த சில நாள்களாக வைகை ஆற்றின் குறுக்கே கமுதக்குடி வழியாக செல்வதாகக் கூறப்படுகிறது. இதனால், அந்த கிராமத்தில் குடிநீா் குழாய் மற்றும் கால்வாய் மேம்பாலம் ஆகியவை சேதமடைவதாக அப்பகுதி பொதுமக்கள் புகாா் தெரிவித்து வருகின்றனா்.
இந்நிலையில், பரமக்குடி வட்டாட்சியா் அலுவலகத்தை 30-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோா் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, மணல் அள்ளி வரும் டிப்பா் லாரிகள் குறுக்கு வழியாக கிராமத்திற்குள் வராமல், முறையான வழித்தடங்கள் வழியாகச் செல்லுமாறும், இதற்கு எதிா்ப்புத் தெரிவித்த கமுதக்குடி ஊராட்சி மன்றத் தலைவரின் கணவா் மீது பரமக்குடி நகா் போலீஸாா் வழக்கு பதிவு செய்துள்ளதைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதனைத் தொடா்ந்து கிராமமக்கள் சாா்பில் கோரிக்கைகள் அடங்கிய மனுவினை வட்டாட்சியரிடம் அளித்துவிட்டு கலைந்து சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.